Representative Image.
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷப் பந்த் டிசம்பர் 30 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) பயங்கர விபத்தில் சிக்கினார். பந்த் தனது மெர்சிடிஸ் எஸ்யூவி காரில் தனது சொந்த ஊரான ரூர்க்கிக்கு திரும்பிக் கொண்டிருந்த நேரத்தில் டிவைடரில் மோதி விபத்துக்குள்ளானது. அவரை பஸ் டிரைவர் மற்றும் பலர் காப்பாற்றினர்.
ஜனவரி 3 ஆம் தேதி (செவ்வாய்கிழமை) தொடங்கும் இலங்கை வெள்ளை பந்து தொடரில் ரிஷப் பந்த் பங்கேற்கவில்லை. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பார்டர் கவாஸ்கர் டிராபிக்கில் பங்கேற்க அவர் தனது திறமையை மெருகூட்ட தேசிய கிரிக்கெட் அகாடெமிக்கு செல்லவிருந்தார். ஆனால் விபத்தில் சிக்கியதில் காயம்பட்டு அவர் தற்போது சிகிச்சையில் உள்ளார்.
இந்நிலையில், ஹரித்வார் மூத்த போலீஸ் சூப்பிரண்டு அஜய் சிங் நேற்று ஊடகங்களுடன் உரையாடியபோது, ரிஷப் பந்த் ஆவேசமாக காரை ஓட்டினாரா அல்லது குடிபோதையில் இருந்தாரா என்று கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், "உத்தரபிரதேச எல்லையில் இருந்து நர்சனில் விபத்து நடந்த இடம் வரை எட்டு முதல் 10 வேக கேமராக்களை நாங்கள் சோதித்தோம், கிரிக்கெட் வீரரின் கார் அந்த தேசிய நெடுஞ்சாலையில் மணிக்கு 80 கிமீ வேக வரம்பை கடக்கவில்லை. சிசிடிவி காட்சிகளில், கார் டிவைடரில் மோதி அதிக வேகத்தில் சென்றது தெரிகிறது.
எங்கள் தொழில்நுட்பக் குழுவினரும் விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்தனர். கிரிக்கெட் வீரர் அதிவேகமாகச் செல்வதைக் குறிக்கும் எதையும் நாங்கள் கண்டுபிடிக்கவில்லை." என்றார் அஜய் சிங்.
“அவர் குடிபோதையில் இருந்திருந்தால், டெல்லியில் இருந்து 200 கிலோமீட்டர் தூரம் ஓட்டி, இவ்வளவு தூரம் எந்த விபத்தையும் சந்திக்காமல் இருப்பது எப்படி? ரூர்க்கி மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி அளித்த மருத்துவர் அவர் முற்றிலும் இயல்பாக இருந்தார் என்று கூறினார். அதனால்தான் அவரால் விபத்து ஏற்பட்டவுடன் உடனடியாக காரில் இருந்து வெளியே வர முடிந்தது. குடிபோதையில் இருந்த எவரும் காரை விட்டு இறங்க முடியாது." என அவர் மேலும் கூறினார்.