இந்திய மகளிர் கிரிக்கெட்டில் புதிய உச்சம்.. யு-19 மகளிர் உலகக்கோப்பையை கைப்பற்றியது இந்தியா!

ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 29) யு-19 இந்திய மகளிர் அணி, பெண்கள் கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக முதல் உலகக் கோப்பையை வென்று வரலாறு படைத்தது.
தென்னாப்பிரிக்காவின் போட்செஃப்ஸ்ட்ரூமில் நடைபெற்ற யு-19 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஷஃபாலி வர்மா தலைமையிலான இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது.
முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து, இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 68 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகினர். இதன் மூலம் இந்திய அணி எளிதில் வென்றது.
கிரிக்கெட்டில் இந்திய பெண்களுக்கான ஒரு வரலாற்றுப் பயணம் இது. உலக கிரிக்கெட்டில் புகழ்பெற்ற பலமாக இருக்கும் இந்திய பெண்கள் அணி, ஐசிசி தொடர்களை பொறுத்தவரை எந்தவொரு கோப்பையையும் வெல்ல முடியாமல் போராடி வந்தது.
ஆனால் நேற்று தென்னாப்பிரிக்காவில் நடந்த இறுதிப் போட்டியில் வென்றதன் மூலம், இந்திய அணி இந்த வரலாறை மாற்றியது.
மேலும் எந்தவொரு ஐசிசி கோப்பையையும் வெல்லும் முதல் ஆசிய அணி என்ற பெருமையையும் இந்திய யு-19 மகளிர் அணி, இதன் மூலம் பெற்றுள்ளது.