ஐ.பி.எல் தொடரில் அதிகமுறை ஆட்டநாயகன் விருதை வென்ற டாப் 5 வீரர்கள்!!

Representative Image. Representative Image.

By Sekar Published: December 09, 2022 & 13:48 [IST]

Share

கிரிக்கெட் விளையாட்டிற்கு என்று தனி மதிப்பு உலகளவில் உள்ளது. அதிலும் இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகளை விளையாடவும் பார்க்கவும் ஆட்களுக்கு பஞ்சமில்லை என்பது நிதர்சமான உண்மை. அந்த வகையில் இந்தியாவில் நடக்கும் 20 ஓவர் ஐ.பி.எல் தொடரைக் காண ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.

ஒவ்வொரு வருடமும் எந்த அணி புதிய வீரர்களைக் களமிறக்கும், எந்த அணியில் உள்ள வீரர்கள் சிறந்த பார்மில் உள்ளார்கள், யார் இந்தமுறை கோப்பையை வெல்வார்கள் என்று கிரிக்கெட் ரசிகர்கள் இடையே ஒரு யுத்த கருத்து போராட்டமே நடக்கும். அந்த வகையில் இதுவரை ஐ.பி.எல் தொடர் ஆரம்பித்து 15-சீசன்கள் முடிந்துள்ளது.

மிகவிரைவில் 16-வது ஐ.பி.எல் தொடர் ஆரம்பிக்கவுள்ளது. மேலும் இந்த தொடருக்கான மினி ஐ.பி.எல் ஏலம் கொச்சியில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.பி.எல் தொடரைப் பார்ப்பதற்கான ஆர்வமும் அதனைப் பற்றிய புதிய தகவல்களைத் தெரிந்து கொள்வதிலும் ரசிகர்கள் இப்போதிலிருந்தே மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். அவர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக இதுவரை நடந்து முடிந்த 15-ஐ.பி.எல் தொடர்களில் அதிகமுறை ஆட்டநாயகன் விருதுகளை வாங்கிய 5 முக்கிய வீரர்களைப் பற்றிப் பார்ப்போம்

ஐந்தாவது இடம் :

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐ.பி.எல் தொடரில் மிகவும் முக்கியமான அணி என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். இந்த அளவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகுந்த பிரபலமாகவும் ஐ.பி.எல் தொடரில் முடிசூடா மன்னனாகவும் விளங்குவதற்கு முக்கிய காரணம் அந்த அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தான் என்று கூறினால் மிகையில்லை. 

முதன்முதலில்  ஐ.பி.எல் தொடர் 2008-ஆண்டு ஆரம்பித்ததிலிருந்து இன்றுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக திகழ்கிறார் மகேந்திர சிங் தோனி. மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை நான்குமுறை ஐ.பி.எல் தொடரில் சாம்பியன் பட்டதை வென்றது. அதற்கு முக்கிய காரணமாக இவர் இருந்தார்.

மகேந்திர சிங் தோனி பலமுறை தோல்வியை நோக்கிப் போய்க் கொண்டிருந்த போட்டிகளில் தனது சிறப்பான வழிநடத்தலின் மூலமாகவும், தனது அசாத்திய பேட்டிங் திறமையாலும் வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றுள்ளார். இவருக்கு சிக்ஸர் மன்னன் என்ற பெயரும் உண்டு. தனது புதுவிதமான ஹெலிகாப்டர் ஷாட் மூலமாக பல  சிக்ஸர் அடித்து மிரளவைத்துள்ளார். 

தோனி இதுவரை இந்த ஐ.பி.எல் தொடரில் 234-போட்டிகளில் பங்கேற்று 4,978 ரன்களை அடித்துள்ளார். மேலும் அவரது சராசரி 39.20 என்பது குறிப்பிடத்தக்கது. பல முக்கிய போட்டிகளில் இறுதிவரை விளையாடி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வெற்றியைத் தேடித்தந்த தோனி, மொத்தமாக 17-முறை ஆட்டநாயகன் விருதுகளை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நான்காவது இடம்:

இந்த ஐ.பி.எல் தொடரில் ஒரு முக்கிய அணியாகவும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நிகராக திறனுடன் இருக்கும் மற்றொரு அணி என்றால் அது மும்பை இந்தியன்ஸ் அணி தான். இந்த அணியின் முன்னணி வீரர் மற்றும் கேப்டனான ரோஹித் சர்மா இதுவரை 18-முறை  ஆட்டநாயகன் விருதுகளை வாங்கி கலக்கியுள்ளார். மேலும் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 5-முறை இவரது தலைமையில் ஐ.பி.எல் தொடரின் சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளது.  

இந்த அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தொடக்க வீரராக களமிறங்கி இறுதிவரை விளையாடி பலமுறை தனது அணியின் வெற்றிக்கு வழிவகுத்துள்ளார். ஐ.பி.எல் தொடரின் ஆரம்பத்தில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் இருந்த ரோஹித் சர்மா, அதன் பிறகு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வந்து அந்த அணியின் கேப்டனாக உயர்ந்தார். 

தனது அசாத்திய ஆட்டத்தின் மூலம் பல வெற்றிகளைத் தேடித் தந்த இவர் இதுவரை 227 ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடி 5879 ரன்களை அடித்துள்ளார். இந்த தொடரில் 30.30 சராசரியை வைத்துள்ளார். மேலும் 18-முறை  ஆட்டநாயகன் விருதுகளை வென்று அசத்தியுள்ளார்.            

மூன்றாவது இடம் :

இந்த பட்டியலில் அடுத்தாக இடம் பெரும் வீரர் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் தான். இவர் இதுவரை 13- ஐ.பி.எல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார்.

டேவிட் வார்னர் தனது மிரட்டலான பேட்டிங் மூலம் ஐ.பி.எல்  தொடரில் தனக்கென தனி முத்திரையைப் பதித்து இருக்கிறார் என்று கூறினால் மிகையில்லை.  

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக விளையாடிய இவர், ஒரு சீசனில் வெறும் 17-போட்டிகளில் 848 ரன்களை அடித்து மிகவும் வியக்கவைக்கும் வகையில், 60.57 சராசரியுடன் ஐ.பி.எல் அரங்கையே அதிரவைத்தார். கடந்த சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்  அணியிலிருந்து வெளியேறி டெல்லி கேபிடல்ஸ் அணிக்காகவும் சிறப்பாக விளையாடினார்.

இத்தகைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் வார்னர் இதுவரை ஐ.பி.எல் தொடரில் 18-ஆட்டநாயகன் விருதுகளை வென்று ஐ.பி.எல் வரலாற்றில் முக்கிய இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது இடம்:

ஐ.பி.எல் வரலாற்றில் மறக்கமுடியாத ஒரு முக்கிய வெளிநாட்டு வீரர் தான் இந்த பட்டியலில் இடம் பெறுகிறார். அவர் வேறுயாருமில்லை, அனைவராலும் யூனிவெர்சல் பாஸ் என்று அழைக்கப்படும் கிறிஸ் கெய்ல் தான் அவர். இவர் ஐ.பி.எல் தொடரில் மொத்தமாக மூன்று அணிகளுக்காக விளையாடியுள்ளார். 

முக்கிமாக ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக பல ஆண்டுகள் விளையாடியுள்ளார். ஐ.பி.எல் தொடரில் இவர் படைக்காத சாதனையே இல்லை  அளவுக்கு பல சாதனைகளை கைவசம் வைத்துள்ளார். மொத்தமாகத் தான் விளையாடிய 142 போட்டிகளில் 4965 ரன்களை அடித்துள்ளார். 

இவரது சராசரி 39.72. மேலும் 357 சிக்ஸர்களை விளாசியுள்ளார். இது தான் ஐ.பி.எல் தொடரில் தனி ஒரு வீரரின் அதிகபட்ச சிக்ஸர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஐ.பி.எல் தொடரில் இதுவரை 22-முறை ஆட்டநாயகன் விருதுகளை வென்று இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடிக்கிறார். ஆனால் இந்த முறை இவர் ஐ.பி.எல் தொடரில் பங்கேற்பரா என்பது சந்தேகமாகத் தான் உள்ளது.

முதல் இடம்:

இந்த ஐ.பி.எல் வரலாற்றில் அதிகமாக  ஆட்டநாயகன் விருதுகளை வென்று முதலிடத்தில் இருப்பவர் ஐ.பி.எல் தொடரில் மட்டுமில்லாமல் உலகளவில் பல ரசிகர்களைத் தனது நேர்த்தியான ஆட்டத்தின் மூலம் பெற்றவர் தான். அவரை கிரிக்கெட் உலகில் அனைவரும் மிஸ்டர்.360 என்று தான் அழைப்பார்கள். ஆம் அவர் தான் ஏபி டி வில்லியர்ஸ். ஐ.பி.எல் தொடரில் இவர் இரண்டு அணிகளுக்காக விளையாடி உள்ளார். குறிப்பாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக பல ஆண்டுகள் விளையாடி, பலமுறை அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியுள்ளார். 

இதுவரை ஏ.பி.டி ஐ.பி.எல் தொடர்களில் தான் விளையாடிய 184 போட்டிகளில் 5162 ரன்களை அடித்துள்ளார். மேலும் 25-முறை ஆட்டநாயகன் விருதுகளை ஐ.பி.எல் தொடரில் வென்றுள்ளார். இவர் கடந்த ஆண்டு அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார். இருந்த போதிலும் இவரது ஐ.பி.எல் சாதனைகளை உடைக்க பல ஆண்டுகள் ஆகும் என்பதில் ஐயமில்லை. 

ஐ.பி.எல் தொடரானது பலதரப்பட்ட மக்களிடையே மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்று இன்றளவுக்கு முக்கிய தொடராக இருப்பதற்கு, இந்த 5-வீர்ர்களை போல் உள்ள பல வீரர்களின்  அசாத்திய ஆட்டமும் புதிய வீரர்களின் பங்களிப்பும் தான் காரணம். மேலும் அடுத்து நடக்கவிருக்கும் ஐ.பி.எல் தொடர் குறித்த புதிய தகவல்களைக் காணக் காத்திருப்போம்.