பிரதமர் நேரடி தலையீடு... ஓய்வு அறிவிப்பிலிருந்து பின் வாங்குகிறார் தமீம் இக்பால்... தமிழ் படம் பாணியில் நடந்த கலகல...

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக தமீம் இக்பால் அறிவித்த நிலையில், தற்போது அந்த முடிவில் இருந்து பின் வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
வங்கதேச கிரிக்கெட் அணியின் தொடக்க வீரராக ஆரம்பத்தில் இருந்தே ஜொலித்தவர் தமீம் இக்பால். 2007 ஆம் ஆண்டு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான இந்த இடது கை ஆட்டக்காரர், தனக்கு கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டு வங்கதேச அணியின் தவிர்க்க முடியாத வீரராக உருவெடுத்தார். 2007 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில், இந்திய அணி லீக் போட்டிகளிலேயே வெளியேறியது ரசிகர்களால் இன்று வரை மறக்க முடியாத துயரமாக இருக்கிறது.
குறிப்பாக அப்போதைய கிரிக்கெட் உலகில் கத்துக்குட்டியாக இருந்த வங்கதேச அணியிடம் படுதோல்வி அடைந்ததால் இந்திய அணி, அந்தத் தொடரில் இருந்தும் வெளியேறியது. கிரிக்கெட் ரசிகர்களால் முக்கியமான ஆட்டமாக பார்க்கப்படும் இந்தப் போட்டியில், இளம் வீரர் தமீம் இக்பால் அரை சதம் விளாசி பலரின் புருவத்தையும் உயர்த்த வைத்தார். தொடர்ந்து பல்வேறு போட்டிகளிலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அவர், ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான வங்கதேச அணியின் கேப்டனாகவும் பொறுப்பு வகித்தார்.
இந்த நிலையில் நேற்று திடீரென செய்தியாளர்கள் சந்திப்பை நடத்திய தமிம் இக்பால், தனது ஓய்வு அறிவிப்பை கண்ணீர் மல்க அறிவித்தார். இதனை சற்றும் எதிர்பாராத கிரிக்கெட் ரசிகர்கள், 34 வயதில் தமிம் இக்பாலின் இந்த முடிவுக்கு வருத்தம் தெரிவித்தனர். சமீபத்தில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு எதிரான போட்டியில் வங்கதேச கிரிக்கெட் அணி படுதோல்வி அடைந்ததே, இந்த முடிவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்னும் சில மாதங்களில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் மற்றும் ஆசிய கோப்பை தொடர் வர இருப்பதால் தமீம் இக்பால் தனது முடிவை மாற்ற வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர். வங்கதேச பிரதமர் சேக் ஹசீனாவும் தமீம் இக்பாலிடம் வேண்டுகோள் விடுத்ததாகவும், இதையடுத்து அவர் தனது முடிவிலிருந்து பின்வாங்கி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தமீம் இக்பாலின் இந்த முடிவால் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.