Representative Image.
T20 World Cup 2022 : ஐசிசி டி20 உலகக்கோப்பையில், பாகிஸ்தான் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக தோற்கடித்து இங்கிலாந்து கோப்பையை கைப்பற்றிய நிலையில், இந்திய அணியின் முகமது ஷமி, பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தரை கலாய்த்துள்ளார்.
ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி பாகிஸ்தானை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு, பென் ஸ்டோக்ஸின் சிறப்பான பேட்டிங்கால் ஒரு ஓவர் மிச்சமிருந்த நிலையில், இங்கிலாந்து அணி இந்த இலக்கை எளிதாக எட்டியது.
சோயிப் அக்தருக்கு முகமது ஷமி அனுப்பிய செய்தி:
இந்நிலையில், பாகிஸ்தானின் முன்னாள் நட்சத்திர வீரர் சோயப் அக்தரின் ட்வீட்டுக்கு இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி கிண்டலாக பதிலடி கொடுத்துள்ளார். முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அக்தர் தனது நாட்டின் தோல்விக்குப் பிறகு ட்விட்டரில் இதயத்தை உடைக்கும் எமோஜியை வெளியிட்டார். அதன் பிறகு ஷமி தனது ட்வீட்டிற்கு பதிலளித்து, "மன்னிக்கவும் சகோதரா, இது கர்மாவின் பலன்" என்று எழுதினார்.
Sorry brother
— Mohammad Shami (@MdShami11) November 13, 2022
It’s call karma ??? https://t.co/DpaIliRYkd
ஷமி ஏன் அக்தரை கிண்டல் செய்தார்?
முன்னதாக, அரையிறுதிப் போட்டியில் இந்திய அணியை இங்கிலாந்து தோற்கடித்தபோது, இந்திய பந்துவீச்சாளர்களை அக்தர் கடுமையாக விமர்சித்தார். இது தவிர ஷமிக்கு இந்த அணியில் இடம் பிடிக்க தகுதி இல்லை என்றும் கூறியிருந்தார். இதற்கு தற்போது ஷமி தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
இங்கிலாந்து இரண்டாவது முறையாக பட்டம் வென்றது:
இங்கிலாந்து அணி 12 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளது. கடைசியாக 2010-ம் ஆண்டு பால் காலிங்வுட் தலைமையில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து தற்போது ஜோஸ் பட்லர் தலைமையில் சாம்பியன் ஆனது.
மேலும் 2019ஆம் ஆண்டு நியூசிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து ஒருநாள் உலகக் கோப்பையையும் வென்று, தற்போது ஒரே நேரத்தில் ஒருநாள் மற்றும் டி20 சாம்பியனாக வலம் வருவது குறிப்பிடத்தக்கது.