T20 World Cup 2022 PAKvsNZ : வீழ்ந்தது நியூசிலாந்து.. இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பாகிஸ்தான்..!!
T20 World Cup 2022 PAKvsNZ : ஐசிசி டி20 உலகக்கோப்பை 2022 தொடரில் இன்று நடந்த அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இன்று நடந்த முதல் அரையிறுதி போட்டியலில் நியூசிலாந்து அணியும், பாகிஸ்தான் அணியும் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து களமிறங்கியது. நியூசிலாந்து அணியின் பின் ஆலன் முதல் ஓவரிலேயே அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தாலும், இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டேவன் கான்வே மற்றும் கேன் வில்லியம்சன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
எனினும் கான்வே 21 ரன்களில் வெளியேற, அடுத்து களமிறங்கிய கிளென் பிலிப்ஸ் 6 ரன்களில் அவுட்டாகி வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். கேன் வில்லியம்சன் ஒருபக்கம் 46 ரன்கள் சேர்த்து வெளியேற, டேரில் மிட்செல் அரைசதம் எடுத்ததோடு, கடைசி வரை அவுட்டாகாமல் 53 ரன்கள் சேர்த்தார்.
ஜேம்ஸ் நீசம் தன் பங்கிற்கு 16 ரன்கள் சேர்க்க, நியூசிலாந்து அணி இறுதியில் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது. 153 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை தெறிக்கவிட்டு, இருவரும் அரைசதம் கடந்தனர்.
முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 105 ரன்கள் சேர்த்த நிலையில், முகமது ரிஸ்வான் 57 ரன்களிலும், பாபர் அசாம் 53 ரன்களிலும் அவுட்டாகி வெளியேறினர். ஒன் டவுனாக களமிறங்கிய முகமது ஹாரிஸ் 30 ரன்கள் எடுத்து அவுட்டாக, பாகிஸ்தான் அணி 19.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதன் மூலம் 2009 ஆம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்துள்ளது. நாளை இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடக்கும் போட்டியில் வெல்லும் அணி, இறுதி போட்டியில் பாகிஸ்தானுடன் மோதும்.