Representative Image.
T20 World Cup 2022 IRE vs NZ : ஐசிசி டி20 உலகக்கோப்பை 2022 தொடரின் சூப்பர் 12 சுற்றில் இன்று நடந்த போட்டியில் நியூசிலாந்து அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துவிட்டது.
டாஸ் வென்ற அயர்லாந்து முதலில் பந்துவீச முடிவு செய்ததை அடுத்து நியூசிலாந்து பேட்டிங்கில் களமிறங்கியது. தொடக்க ஜோடியான பின் ஆலன் மற்றும் டேவன் கான்வே இருவரும் நல்ல தொடக்கத்தை அமைத்தனர். முதல் விக்கட்டுக்கு இந்த ஜோடி 52 ரன்கள் சேர்த்த நிலையில், ஆலன் 32 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார்.
அடுத்து வந்த கேன் வில்லியம்சன் கான்வேயுடன் சேர்ந்து அயர்லாந்து பந்துவீச்சை சிதறடித்தார். ஒருபக்கம் கேன் வில்லியம்சன் நிலைத்து நின்று ஆடினாலும், கான்வே 28 ரன்களிலும், அடுத்து வந்த கிளென் பிலிப்ஸ் 17 ரன்களிலும் அவுட்டாகினர்.
எனினும் டேரில் மிட்செல் கேன் வில்லியம்சனுடன் இணைந்து அயர்லாந்து பந்துவீச்சை சிதறடிக்க நியூசிலாந்து அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. கேன் வில்லியம்சன் அரைசதம் கடந்து ஆடி வந்த நிலையில், 19வது ஓவரை வீசிய அயர்லாந்தின் ஜோசுவா லிட்டிலின் பந்துவீச்சில் 61 ரன்கள் எடுத்த நிலையில் கேன் வில்லியம்சன் அவுட்டானார்.
19வது ஓவரின் 2வது பந்தில் கேன் வில்லியம்சன் அவுட்டாக, அடுத்தடுத்த பந்துகளில் ஜேம்ஸ் நீசம் மற்றும் மிட்செல் சான்ட்னர் வந்தவேகத்தில் டக்கவுட் ஆகி வெளியேறினர். இதன் மூலம் நடப்பு உலகக்கோப்பை தொடரின் 2வது ஹாட்ரிக்கை எடுத்து ஜோசுவா லிட்டில் புதிய சாதனை படைத்தார்.
ஜோசுவாவின் மிரட்டல் பந்துவீச்சால் 200 ரன்களை நியூசிலாந்து எளிதாக கடந்து விடும் என்ற எதிர்பார்ப்பு பொய்த்துப் போய், அந்த அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்கார்கள் இருவரும் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர்.
அயர்லாந்து அணி பவர்பிளே முடிந்து 8வது ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 68 ரன்கள் குவித்ததால், அயர்லாந்து நியூசிலாந்துக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து அரையிறுதி கனவை பாழாக்கி விடுமோ என நியூசிலாந்து ரசிகர்கள் பதற ஆரம்பித்துவிட்டனர்.
எனினும் அதற்கடுத்து ஆட்டம் அடியோடு திரும்பியது. 9வது ஓவரின் முதல் பந்தில் 30 ரன்கள் எடுத்திருந்த ஆண்ட்ரூ பால்ப்ரின் மிட்செல் சான்ட்னர் பந்தில் அவுட்டானார். அடுத்து 10வது ஓவரின் முதல் பந்தில் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பால் ஸ்டிர்லிங்கும் 37 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார்.
தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் நல்ல தொடக்க அமைத்துக் கொடுத்து நியூசிலாந்து அணியை பீதிக்குள்ளாக்கினாலும், இவர்கள் இருவரும் வெளியேறிய நிலையில், மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து சீரான இடைவெளியில் அவுட்டாகி வந்ததால், ஆட்டம் அடியோடு மாறியது.
இறுதியில் 20 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் 7 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிப்பதோடு, யாராலும் எட்டிப்பிடிக்க முடியாத நிகர ரன் ரேட்டை கொண்டிருப்பதால், முதல் அணியாக அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது.