Representative Image.
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 12 ஆட்டங்கள் இறுதி கட்டத்தை நெருங்கியது. இந்தப் போட்டிக்கான நான்காவது சுற்று போட்டியில், இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் இன்று மோதியது.
இதில், இந்திய அணி முதலில் டாஸ்கை வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்தப் போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல். ரோஹித் சர்மா களம் இறங்கினர். ஆனால், ரோஹித் சர்மா 2 ரன்கள் எடுத்த நிலையில், ஆட்டம் இழந்ததால், விராட் கோலி அடுத்து களம் இறங்கினார். இந்த இணை பொறுப்பாக விளையாடி ரன்களை சேர்த்துக் கொண்டிருந்தது.
இதில், கே.எல்.ராகுல் 32 பந்துகளில் அரை சதம் அடித்தார். இதனைத் தொடர்ந்து, அக்ஷர் படேல், 7 ரன்களுக்கும், ஹர்திக் பாண்டியா 5 ரன்களுக்கும், சூர்யகுமார் யாதவ் 30 ரன்களும் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர். அதன் படி, இந்திய அணி பேட்டிங் செய்ததில் 20 ஓவரில் 184 ரன்களைக் குவித்தது.
இதனைத் தொடர்ந்து, 185 ரன்களை இலக்காகக் கொண்ட பங்களாதேஷ் அணி தொடக்கத்திலேயே அதிரடியாக ஆடியது. அதன்படி, 7 ஓவர் வந்த நிலையில் விக்கெட் இழப்புகள் எதுவும் இல்லாமல் 66 ரன்களை எடுத்தது. அப்போது மழை பெய்ததால், ஆட்டத்தில் தடை ஏற்பட்டு வீரர்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
பின்னர், மழை நின்ற பிறகு மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய போது, மழையின் காரணமாக 16 ஒவராக குறைக்கப்பட்டது. அதன் படி பங்களாதேஷ் அணிக்கு 151 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. மழைக்கு முன்பு, அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்த வங்கதேச அணி, மழைக்குப் பிறகு ஆடிய போது தடுமாறியது. இதனால், இறுதியில் வங்கதேச அணி 16 ஓவருக்கு 145 ரன்களை எடுத்து தோல்வியைத் தழுவியது.
இதனால் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2022 ஆம் ஆண்டின் வங்கதேசம் மற்றும் இந்தியாவிற்கு இடையேயான போட்டியில் இந்தியா வெற்றி பெற்று, அடுத்த கட்டத்திற்கு முன்னேறியது.