T20 World Cup 2022 BANvsPAK : வங்கதேசம் கதம் கதம்.. அரையிறுதிக்கு முன்னேறியது பாகிஸ்தான்!!

Representative Image. Representative Image.

By Sekar Published: November 06, 2022 & 13:17 [IST]

Share

T20 World Cup 2022 BANvsPAK : ஐசிசி டி20 உலகக்கோப்பை 2022 சூப்பர் 12 சுற்றில் இன்று நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. தொடக்க ஆட்டக்காரர் நஜ்மல் ஹுசைன் சாண்டோ அரைசதம் விளாசி 54 ரன்கள் குவித்தர். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸ் 10 ரன்களும் சவும்யா சர்க்கார் 20 ரன்களும், அலிப் ஹொசைன் 24 ரன்களும் எடுத்தனர். 

எனினும் மற்ற வீரர்கள் அனைவரும் பாகிஸ்தான் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஒற்றை இலக்கத்திலேயே வெளியேறினர். இதனால் வங்கதேசம் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு வெறும் 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. சிறப்பாக பந்துவீசிய பாகிஸ்தான் பவுலர் ஷாஹீன் அப்ரிடி 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இதையடுத்து 128 ரன்கள் எனும் எளிய இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் நிலைத்து நின்று நல்ல அடித்தளம் அமைத்தனர். 11வது ஓவர் வரை தாக்குப்பிடித்த இந்த ஜோடி 57 ரன்களில் பிரிந்தது. உலகக்கோப்பை தொடரில் இதற்கு முன்பு நடந்த அனைத்து போட்டிகளிலும் சொதப்பி வந்த பாபர் அசாம் இதில் பொறுப்புடன் விளையாடி 25 ரன்கள் சேர்த்தார்.

டாப் ஆர்டரில் முகமது நவாஸை தவிர அனைவருமே பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிக்கு வழிநடத்தினர். இறுதியில் 11 பந்துகள் மீதமிருந்த நிலையில், பாகிஸ்தான் அணி இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முகமது ரிஸ்வான் அதிகபட்சமாக 32 ரன்கள் சேர்த்தார்.

இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. ஏற்கனவே தென்னாப்பிரிக்கா நெதர்லாந்திடம் வீழ்ந்துவிட்டதால் இந்தியாவும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.