T20 World Cup 2022 AUS vs AFG : ஆப்கானை போராடி வீழ்த்திய ஆஸ்திரேலியா.. திக்திக் நிலையில் அரையிறுதி வாய்ப்பு!!

Representative Image. Representative Image.

By Sekar Published: November 04, 2022 & 19:01 [IST]

Share

T20 World Cup 2022 AUS vs AFG : ஐசிசி 2022 டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடந்த போட்டியில், ஆஸ்திரேலியா ஆப்கானிஸ்தானை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது. 

டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங்கில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கேமரூன் கிரீன் வெறும் 3 ரன்களில் வெளியேறினாலும், டேவிட் வார்னர் நிதானமாக ஆடி 25 ரன்கள் சேர்த்தார்.

ஒன் டவுனாக இறங்கிய மிட்செல் மார்ஷ் 45 ரன்கள் எடுத்த நிலையில், மார்கஸ் ஸ்டோய்னிஸ் 25 ரன்கள் எடுத்தார்.  கிளென் மேக்ஸ்வெல் கடைசி  அவுட்டாகாமல் நின்று அரைசதம் கடந்து 54 ரன்கள் குவித்தார். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது.

அபாரமாக பந்துவீசிய ஆப்கான் பவுலர் நவீன் உல் ஹக் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 169 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆப்கான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கனி வந்த வேகத்தில் வெறும் 2 ரன்கள் எடுத்து அவுட்டானார். எனினும் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ரஹ்மனுல்லா குர்பஸ் அதிரடியாக ஆடி 30 ரன்களில் அவுட்டானார்.

முதல் இரண்டு விக்கெட்டுகளை பவர்பிளேயில் இழந்துவிட்டாலும், 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இப்ராஹிம் சட்ரன் மற்றும் குல்படின் நயீப் நிலைத்து நின்று ஆடி ரன் சேர்த்தது. இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் திணறிய நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா ஒரு கட்டத்தில் தோல்வியைத் தழுவி விடுமோ என்ற அச்சம் ஆஸ்திரேலிய ரசிகர்களிடம் ஏற்பட்டது. 

ஒருவழியாக போராடி ஆப்கான் அணியின் ஸ்கோர் 99 ஆக 14வது ஓவரின் முதல் பந்தில் இந்த ஜோடியை பிரித்தது. முதல் பந்தில் நயீப் 39 ரன்களில் அவுட்டாக, அடுத்து ரன்னவுட் ஆக, இரண்டாவது பந்தில் இப்ராஹிமும் 26 ரன்களில் அவுட்டானார். தொடர்ந்து 4வது பந்தில் நஜிபுல்லா சட்ரன் டக்கவுட்டாக ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அடுத்து 15வது ஓவரில் முகமது நபியும் ஒரு ரன்னில் வெளியேற ஆப்கான் கதை முடிந்தது என ஆஸ்திரேலியா நினைக்க, அடுத்து ஜோடி சேர்ந்த டர்விஷ் ரசூலி மற்றும் ரஷீத் கான் ஜோடி ஆஸ்திரேலியாவை கதிகலங்க வைத்துவிட்டது. ரசூலி நிலைத்து நின்று கம்பெனி கொடுக்க, ரஷீத் கான் வெளுத்து வாங்கினார். கடைசி ஒரு ஓவரில் 22 ரன்கள் தேவை எனும் இக்கட்டான நிலையில் முதல் பந்தை ரசூலி எதிர்கொண்ட நிலையில், அவர் ரஷீத் கானுக்கு ஸ்ட்ரைக்கை மாற்ற முயன்று ரன்னவுட் ஆனார்.

தொடர்ந்து ஸ்ட்ரைக்கர் எண்டுக்கு வந்த ரஷீத் கான் இரண்டாவது பந்தில் பவுண்டரியையும், நான்காவது பந்தில் சிக்சரும் விலாச ஆட்டத்தின் போக்கு திக்திக் நிலைக்கு சென்றது. கடைசி இரண்டு பந்துகளில் 11 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் நிலையில், 5வது பந்தில் 2 ரன்களும், 6வது பந்தில் 4 ரன்களும் மட்டுமே எடுக்கப்பட்டதால் ஆப்கான் அணி வெறும் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ரஷீத் கான் 48 ரன்கள் குவித்தார். இது சர்வதேச டி20 போட்டிகளில் அவரது அதிகபட்ச ஸ்கோராகும்.

இதற்கிடையே இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துள்ளது. நாளை இங்கிலாந்து மற்றும் இலங்கை இடையே நடக்கும் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றால் புள்ளிகள் அடிப்படையில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து சமமாக வரும். அப்போது நிகர ரன் ரேட் அடிப்படையில் இங்கிலாந்து அரையிறுதிக்குள் நுழைந்துவிடும்.

இதனால், இங்கிலாந்தை இலங்கை வீழ்த்தினால் மட்டுமே, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா 2022 உலகக்கோப்பை தொடரில் அரையிறுதி வாய்ப்பை பெற முடியும்.