காயம் இன்னும் குணமாகலை.. வங்கதேசத் தொடரில் ஜடேஜாவுக்கு பதில் மிஸ்டர் 360?

Representative Image. Representative Image.

By Sekar Published: November 23, 2022 & 11:29 [IST]

Share

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் மிடில் ஆர்டர் பேட்டர் சூர்யகுமார் யாதவ் இடம்பெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. முழங்கால் காயத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலாக அவர் களமிறங்க உள்ளார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) வட்டாரங்களின்படி, டி20 வடிவத்தில் சூர்யகுமார் யாதவின் கடந்த இரண்டுகளில் நிலையான செயல்பாட்டின் காரணமாக, புதிதாக அமைக்கப்படும் தேர்வுக் குழு அல்லது இந்திய அணி நிர்வாகத்தால் வங்காளதேச டெஸ்டில் அவருக்கு முன்னுரிமை அளிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

டி20 வடிவிலான வெற்றிக்குப் பிறகு, சூர்யகுமார் யாதவ் டெஸ்டிலும் சிறந்து விளங்கத் தயாராகிவிட்டார். முன்னதாக, இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, ரெட்-பால் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்படும் திறன் கொண்ட ‘மூன்று வடிவ வீரர்’ என்று சூர்யகுமார் யாதவை இந்திய டெஸ்ட் அணியில் சேர்ப்பதற்காக வாதிட்டார்.

"அவர் ஒரு மூன்று வடிவ வீரர் என்று நான் நினைக்கிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டுக்காக அவரைப் பற்றி பேச மாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் சொல்கிறேன். இவரால் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட முடியும் மற்றும் சிலரை ஆச்சரியப்படுத்த முடியும். டெஸ்டில் அவரை நம்பர் 5-ல் அனுப்புங்கள். அவர் அதை சரியாய செய்வார்.”என்று சாஸ்திரி 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் போது கூறினார்.

இதற்கிடையில், சூர்யகுமார் யாதவ் உள்நாட்டு கிரிக்கெட்டில் முதல் தர கிரிக்கெட்டில் 44.01 சராசரியில் 5,000 ரன்களுக்கு மேல் எடுத்த ஒரு அற்புதமான ரெட்-பால் சாதனையையும் படைத்துள்ளார். இதில் 14 சதங்கள் மற்றும் 26 அரை சதங்களை தனது பெயரில் பதிவு செய்துள்ளார். 

முன்னதாக, சூர்யகுமார் இங்கிலாந்துக்கு எதிரான வெளிநாட்டுத் தொடர் மற்றும் நியூசிலாந்திற்கு எதிரான உள்நாட்டுத் தொடருக்கான இந்தியாவின் டெஸ்ட் அணிகளில் ஒரு பகுதியாக இருந்தார்.ஆனால் அவர் இன்னும் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படவில்லை மற்றும் இன்னும் அதிகாரப்பூர்வமாக சிவப்பு-பந்து கிரிக்கெட்டில் அறிமுகமாகவில்லை.

இதற்கிடையில், 2022 ஆசிய கோப்பையில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் முழங்கால் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட ரவீந்திர ஜடேஜா வங்கதேச டெஸ்டில் 100% உடல் தகுதியுடன் இருக்க வாய்ப்பில்லை என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

"ஜடேஜா தனது பரிசோதனை மற்றும் பயிற்சிக்காக தேசிய கிரிக்கெட் அகாடெமிக்கு பலமுறை சென்றுள்ளார். இருப்பினும், வங்காளதேச தொடருக்கு அவர் தகுதியுடையவராக இருக்க வாய்ப்பில்லை. எப்படியிருந்தாலும், சேத்தன் ஷர்மா தலைமையிலான முன்னாள் தேர்வுக் குழு அவரை வைத்திருந்தது. அவர் உடற்தகுதியை பூர்த்தி செய்தால் அணியில் இருப்பார். இல்லையெனில் அவருக்கு பதிலாக மாற்று வீரர் களமிறக்கப்படுவார்.” என்று பிசிசிஐ வட்டாரங்களில் கூறப்படுகிறது.

இந்திய அணி வங்கதேசத்துக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 14-18 வரை சிட்டகாங்கிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி மிர்பூரில் 22-26 வரையிலும் நடைபெறும்.