Representative Image.
சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியில் வாய்ப்புகள் புறக்கணிக்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் நிலையில், 2022 காலண்டர் ஆண்டில் இந்தியாவுக்காக அதிக சிக்ஸர் அடித்தவர் பட்டியலில் சஞ்சு சாம்சன் முதலிடத்தில் இருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன் தனது திறமையை பலமுறை நிரூபித்தும் அவருக்கு இந்திய அணியில் குறைவான வாய்ப்புகளே வழங்கப்படுவதாக கிரிக்கெட் ரசிகர்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இது தொடர்பாக சமீபத்தில் #Castiest_BCCI என்ற ஹேஷ்டேக்கையும் ட்ரெண்டாக்கி பிசிசிஐக்கு அதிர்ச்சி கொடுத்தனர்.
இதையடுத்து தற்போது நடந்து வரும் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில், சஞ்சு சாம்சன் பிளேயிங் 11'இல் சேர்க்கப்பட்டார். இதில் லோயர் ஆர்டரில் களமிறங்கிய சஞ்சு சாம்சன் 37 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார்.
இந்நிலையில், தற்போது, ஒருநாள் போட்டிகளில் 2022 காலண்டர் ஆண்டில் இந்தியாவுக்காக அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் சஞ்சு சாம்சன் முதலிடத்தில் இருக்கும் தகவல் வெளியாகியுள்ளது. 2022 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கான 10 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள சஞ்சு சாம்சன், அதில் 9 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து 14 சிக்ஸர்களை அடித்துள்ளார்.
இதில் ஷ்ரேயாஸ் அய்யர் 10 சிக்ஸர்களுடன் இரண்டாம் இடத்திலும், ஷுப்மன் கில் 9 சிக்ஸர்களுடன் மூன்றாம் இடத்திலும், இஷான் கிஷான் 8 சிக்ஸர்களுடன் நான்காம் இடத்திலும் உள்ளனர்.
இதே போல டெஸ்ட் போட்டிகளில், இந்திய அணிக்காக 2022 காலண்டர் ஆண்டில் அதிக சிக்ஸர் அடித்தவராக ரிஷப் பண்ட் 14 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளதோடு, டெஸ்ட் கிரிக்கெட்டில் உலக அளவில் அதிக சிக்ஸர் அடித்தவர்கள் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார்.
மேலும் டி20 கிரிக்கெட்டில் மிஸ்டர் 360 சூர்யகுமார் யாதவ், 2022 காலண்டர் ஆண்டில், இந்திய அளவில் மட்டுமல்லாது உலக அளவிலும் முதலிடத்தில் உள்ளார். டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவ் இதுவரை 68 சிக்ஸர்களை அடித்துள்ளார்.