Representative Image.
இந்தியாவின் உள்நாட்டுத் தொடர்களின் ஒன்றான விஜய் ஹசாரே டிராபி தற்போது நடந்து வருகிறது. இந்த தொடரின் இன்றைய காலிறுதி ஆட்டத்தில் மகாராஷ்டிரா மற்றும் உத்தர பிரதேஷ் அணிகள் நரேந்திர மோடி பி மைதானத்தில் மோதின.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மகாராஷ்டிரா அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் உத்தர பிரதேஷ் அணியின் பௌலர் சிவா சிங் வீசிய 49-வது ஓவரில் 7- சிக்ஸ்களை அடித்து கிரிக்கெட் உலகில் ஒரு புதிய வரலாற்றைப் படைத்தார்.
ஐபிஎல்லில் கடந்த இரு சீசன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காராக களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் தனது சிறப்பான ஆட்டத்தினால் அணியில் முக்கிய இடத்தை பிடித்தார். மேலும் பல போட்டிகளில் சிறப்பாக விளையாடி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கும் வழிவகுத்தார்.
இதன்மூலம் தமிழக மற்றும் ஐபில் ரசிகர்கள் இடையே தனக்கென தனி இடத்தையே பிடித்துவிட்டார் என்று கூறினால் மிகையில்லை. ஐபிஎல்லில் தனது ஆட்டத்தினால் இந்திய அணியிலும் இடம்பிடித்தார். இதுவரை இந்திய அணிக்காக 1 ஒருநாள் போட்டி மற்றும் 9 டி-20 போட்டிகளில் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
இவர் இந்த வருட விஜய் ஹசாரே டிராபியிலும் சிறப்பாக விளையாடி தனது மகாராஷ்டிரா அணியைக் காலிறுதி வரை கொண்டுவந்துள்ளார். இன்றைய காலிறுதி ஆட்டத்தில் வெறும் 25-வயதான ருதுராஜ் கெய்க்வாட் ஒரே ஓவரில் 42 ரன்களை அடித்து விளாசினார். மொத்தமாக ஒரு ஓவரில் 43 ரன்ககள் வந்தது.
அதில் 7 சிக்ஸ்கள் மற்றும் ஒரு நோ பாலும் அடங்கும். இதன்மூலம் ஒயிட்பால் கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் 7-சிக்ஸ்களை அடித்த முதல் நபர் என்ற சாதனையைப் படைத்தார். மேலும் இன்றைய போட்டியில் தனது அணிக்காக 220*(159) ரன்களை அடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இவரது சிறப்பான ஆட்டத்தினால் மகாராஷ்டிரா ஆணி 330/5 ரன்களை அடையமுடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டத்திற்கு அனைத்து தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் வந்தவண்ணம் உள்ளன. குறிப்பாகச் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.