IPL 2023 : நான் மிகவும் அதிர்ஷ்டசாலி.. கேப்டன் தோனி குறித்து சிஎஸ்கே வீரர் பகிர்ந்த நிகழ்வு!!

Representative Image. Representative Image.

By Sekar Published: December 08, 2022 & 13:15 [IST]

Share

IPL 2023 : இந்தியாவின் உள்நாட்டுத் தொடரான விஜய் ஹசாரே டிராபியில் பல மாநிலங்களின் சார்பாக விளையாடிய வீரர்கள் பலர் பல புதிய சாதனைகளைப் படைத்தனர். அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள ருதுராஜ் கெய்க்வாட் படைத்த புதிய சாதனை அனைத்து கிரிக்கெட் ரசிகர்களாலும் பாராட்டப்பட்டது.

அண்மையில் நடந்து முடிந்த விஜய் ஹசாரே டிராபியில் மகாராஷ்டிரா அணியின் கேப்டனாக செயல்பட்டுச் சிறப்பாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் தனது அணியை இறுதிப் போட்டிவரை அழைத்துச் சென்றார்.
மேலும் இறுதிப் போட்டியில் சௌராஷ்டிரா அணியுடன் மோதிய மகாராஷ்டிரா அணி, எதிர்பாராத விதமாகத் தோல்வியைத் தழுவியது. 

இருந்தபோதிலும் ருதுராஜ் கெய்க்வாடின்  சிறந்த பங்களிப்பிற்கு கிரிக்கெட் வட்டாரங்களில் மிகுந்த வரவேற்பும் பாராட்டுகளும் அளிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ருதுராஜ் கெய்க்வாட் சில கருத்துக்களை கிரிக்கெட்டில் சாதிக்க நினைக்கும் இளம் வீரர்களுக்குக் கூறினார்.

அதில், அவர் தற்போது உள்ள இளம் கிரிக்கெட் வீரர்கள் ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்று தங்கள் திறமையை நிரூபித்தால் தான் இந்திய அணியில் இடம்பெற முடியும் என்று நினைத்துள்ளார்கள். அப்படி இல்லை, இந்தியாவில் நடக்கும் உள்நாட்டுத் தொடர்களில் தங்களின் சிறப்பான பங்களிப்பைத் தந்தாலே  விரைவாகவே இந்திய அணியில் இடம்பெறலாம் என்று கூறினார்.

மேலும் விஜய் ஹசாரே டிராபியில் இறுதிப் போட்டிவரை முன்னேறி வெற்றியைப் பெறாதது வருத்தமாக இருந்தாலும், அந்த தொடரில் தான் ஒரே ஓவரில் 7-சிக்ஸர்களை அடித்துக் குறிப்பிட்ட நபர்கள் மட்டும் இருக்கும் சாதனை பட்டியலில் இடம்பெற்றது மகிழ்ச்சியை அளிப்பதாகக் கூறினார். 

ருதுராஜ் கெய்க்வாட் லிஸ்ட்-எ போட்டியில் உத்தரப்பிரதேச அணியின் பௌலர் சிவாசிங் வீசிய ஒரு ஓவரில் 43-ரன்கள் அதுவும் 7-சிக்ஸர்களாக அடித்து புதிய சாதனையைப்  படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து பேசிய ருதுராஜ் கெய்க்வாட் தனக்கு இந்திய அணியில்  ரோல் மாடலாக கருதும் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர் ,மகேந்திர சிங் தோனி மற்றும் விராட் கோலி என்றார். அதுவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக  விளையாடும் பொழுது இந்திய அணியின் வெற்றி கேப்டனாக கருதப்படும் மகேந்திர சிங் தோனி அவர்களோடு ஒரே அணியில் இருப்பதும் அவரின் அருகிலிருந்து பல புதிய அனுபவங்களைப் பெறுவது மகிழ்ச்சியை அளிப்பதாகவும், அந்த வகையில் தான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று கூறினார்.

எப்பொழுது சென்னை வந்தாலும் தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன் என்றும் கூறினார். இதனைத் தொடர்ந்து அடுத்தாக வரும் ரஞ்சி ட்ரோபியில் சிறப்பாக விளையாட வேண்டும் எனவும், ஐ.பி.எல் போட்டிகள் ஆரம்பிக்க இன்னும் பல நாட்கள் இருப்பதால் அதைப்பற்றி ஏதும் யோசிக்கவில்லை என்று கூறினார். 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரராகக் களமிறங்கும் ருதுராஜ் கெய்க்வாட் தற்போது தனது  சிறப்பான பார்மில் இருப்பது அந்த அணியின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.