Representative Image.
சேத்தன் ஷர்மா தலைமையிலான தேர்வுக் குழு, வரும் ஜனவரி 3 ஆம் தேதி தொடங்கும் இலங்கைக்கு எதிரான உள்நாட்டுத் தொடருக்கான இந்திய அணிகளைத் தேர்ந்தெடுக்கும் எனத் தெரியவந்துள்ளது. ஏனெனில் புதிய தேர்வுக்குழு இன்னும் ஒரு வார காலத்திற்குள் அமைக்க முடியாது என்பதால் பிசிசிஐ இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
கிரிக்கெட் ஆலோசனைக் குழுவின் (சிஏசி) தேர்வுக் குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான குறுகிய பட்டியலிடப்பட்ட வேட்பாளர்களின் நேர்காணல்கள் டிசம்பர் 26 மற்றும் 28 க்கு இடையில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் பழைய தேர்வு கமிட்டியே இலங்கையில் நடக்க உள்ள வெள்ளை பந்து கிரிக்கெட்டுக்கான இந்திய அணியை தேர்ந்தெடுக்கும் என்று பெயர் வெளியிட விரும்பாத பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
மேலும், இப்போதைக்கு, டி20 போட்டிகளுக்கு முன்பு ரோஹித் சர்மாவின் கட்டை விரல் காயம் போதுமான அளவு குணமடையும் என்று தெரியவில்லை, அப்படியானால், ஹர்திக் அணியை வழிநடத்துவார். கேஎல் ராகுலைப் பொருத்தவரை, அவருக்கு டி20 போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்படாது எனக் கூறப்படுகிறது.
மேலும் விராட் கோலி போன்ற சில வீரர்களுக்கும் டி20 வடிவத்தில் இருந்து ஓய்வு அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே புதிய தேர்வு குழு உறுப்பினர் பதவிகளுக்கு வெங்கடேஷ் பிரசாத், நயன் மோங்கியா, மனிந்தர் சிங், அதுல் வாசன், நிகில் சோப்ரா, அமய் குராசியா, ஞானேந்திர பாண்டே மற்றும் முகுந்த் பர்மர் ஆகியோருடன் சேத்தனும் அவரது மத்திய மண்டல சக ஊழியர் ஹர்விந்தர் சிங்கும் தேர்வாளர்கள் பதவிகளுக்கு மீண்டும் விண்ணப்பித்துள்ளனர்.