Representative Image.
இந்திய அணியின் இளம் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான பந்த், சமீபத்தில் சாலை விபத்தில் படுகாயமடைந்து டேராடூனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் அவரை அடுத்த கட்ட சிகிச்சைக்காக மும்பையில் உள்ள மருத்துவமனைக்கு மாற்ற பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.
ரிசாப் பந்த் அவரது காரில் தனது இல்லத்திற்கு சென்று டெல்லி- டேராடூன் நெடுஞ்சாலையில் பயணித்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளாகி உடல் தசைகள்,முகம் என பல இடங்களில் காயம் ஏற்பட்டு டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் பிசிசிஐயின் மருத்துவ குழு மேற்பார்வையில் சிகிச்சை பெற்று வந்தார்.
அவரது வலது முழங்கால் தசைநாரில் காயம் ஏற்பட்டுள்ளதால் அதற்கான சிகிச்சைக்காக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தலைமையில் மருத்துவர்களிடம் ஆலோசிக்கப்பட்ட பின் ஏர் ஆம்புலன்ஸ் மூலம் மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்டு,அங்கு அவர் டாக்டர் டின்ஷா பார்திவாலாவின் கண்காணிப்பில் இருப்பார் என்று தெரிய வருகிறது.
இதுகுறித்து பிசிசிஐ நிர்வாகம் அளித்த விளக்கத்தில், பந்த் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில் அடுத்த கட்ட சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்,அவர் விரைவில் குணமடைந்து வருவதற்கான அனைத்து உதவிகளையும் பிசிசிஐ நிர்வாகம் செய்யும் என்று கூறப்பட்டது.
பந்த் உடம்பில் ஏற்பட்டுள்ள காயங்கள் குணமாக 4-6 மாதங்கள் ஆகும் என்ற கூறப்படும் நிலையில் அவர் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் ஐ.பி.எல் தொடர்களில் பங்கேற்க வாய்ப்பில்லை என்று தெரிய வருகிறது,ஆனால் இந்த ஆண்டு இறுதியில் நடக்கவுள்ள ஒருநாள் தொடரில் பந்த் முழுமையாக குணமாகி பங்கேற்க வேண்டும் என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்கிறார்கள்.