50-வது பிறந்தநாள் காணும் ராகுல் டிராவிட் ‘தி வால்’..! சாதனைகள்,பயணங்கள் ஒரு பார்வை..!

Representative Image. Representative Image.

By Mugunthan Velumani Published: January 09, 2023 & 11:11 [IST]

Share

இந்திய அணியின் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேனாக கொடிகட்டி பறந்த  முன்னாள் இந்திய அணியின் கேப்டன், தற்போது  இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் என பல பதவிகளுக்கு சொந்தக்காரரான  ராகுல் டிராவிட் தனது 50-வது அகவையில் அடியெடுத்து வைக்கிறார். இந்த தருணத்தில் இந்திய அணிக்காக அவர் பெற்று தந்த வெற்றிகள், படைத்த மகத்தான சாதனைகள் என அனைத்தையும் சிறு தொகுப்பாக இங்கு  காண்போம்.

டிராவிட் இளமை பருவம்:

இந்தியாவில் மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தோரில் ஜனவரி 11 தேதி 1973 ஆம் ஆண்டு பிறந்தார் டெஸ்ட் தொடரின் ஜாம்பவான் ராகுல் டிராவிட் ,இவர் மத்திய பிரதேசத்தில் பிறந்திருந்தாலும் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் தான் மேலும் இவரது இளமைக்காலம் கர்நாடக மாநிலத்தில் தான் கழிந்தது.

டிராவிட் தனது 12-வயதில் கிரிக்கெட் விளையாட தொடங்கி விட்டார்,அதன்பின் கர்நாடக அணிக்காக அண்டர் -15,அண்டர்-19 தொடர்களில் விளையாடியுள்ளார்  ஆனால் அன்று யாரும்  அறியவில்லை  இந்த சிறுவன் தான் வருங்காலத்தில் இந்திய அணியின் தூணாக திகழ்க  போகிறான். 

சர்வதேச அரங்கில் கால் பதித்த தருணம் : 

இந்திய அணிக்காக  அசைக்க முடியாத சாதனைகளை படைத்த ராகுல் டிராவிட் ஏப்ரல் 3 1996-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள்  தொடரில் களமிறங்கினார்.அதன்பின் அதே ஆண்டில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் லார்ட்ஸ் மைதானத்தில் தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய டிராவிட் 95 ரன்களை அடித்து அசத்தினார்.

அதன்பின் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தனது முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார்,அந்த தொடரில் சிறப்பாக விளையாடி அணிக்காக ஒரு போட்டியில் வெற்றியை பெற்று தந்து  ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

டிராவிடின் சர்வதேச ரன்கள் விவரம் :  

ராகுல் டிராவிட் இந்திய அணிக்காக மொத்தமாக 164 டெஸ்ட் போட்டிகள் , 334 ஒருநாள் போட்டிகளில் மற்றும் ஒரு டி20 போட்டியில்   விளையாடியுள்ளார்.இந்திய அணிக்காக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடி 10000 ரன்களுக்கு மேல் இரண்டு தொடர்களிலும் அடித்து சாதனை படைத்துள்ளார்.

டெஸ்ட் போட்டியின் மொத்த  ரன்கள்                        :      13288

டெஸ்ட் போட்டியில்  சராசரி                                         :      52.31

டெஸ்ட் போட்டியில் சதம்   எண்ணிக்கை                 :       36

டெஸ்ட் போட்டி இரட்டை சதம்  எண்ணிக்கை        :       5

ஒருநாள் போட்டிகளில் மொத்த ரன்கள்                    :       10899

ஒருநாள் போட்டி சதம்    எண்ணிக்கை                      :       12 

டிராவிட் தி வால் : 

டெஸ்ட் போட்டிகளில் முடிசூடா மன்னனாக திகழ்ந்த டிராவிட் அந்த காலகட்டத்தில் எப்படி பட்ட வேகப்பந்து வீச்சாளரின் பௌலங்கையும் மிகவும் அசால்டாக தடுத்து நிறுத்துவார், மிகவும் வேகமாக ஓடி வந்து அதிரடியாக பௌலிங் செய்யும் மெக்ராத், ஷான் பொலாக்,வாசிம் அக்ரம் போன்றவர்களின் பந்தை ஒரே ஸ்டோக்கில் அப்படியே நிறுத்துவார் டிராவிட் .

அதன்பின் பல இக்கட்டான சூழ்நிலைகளில் அணியின் வீரர்கள் தங்களின் விக்கெட்டுகளை இழந்த நேரத்தில் தனது விக்கெட்டை இறுதி வரை இழக்காமல் எதிரணியின் பௌலர்களை பதம்பாததால் இந்திய அணி “தி வால்” என்று செல்லமாக டிராவிட் அழைக்கபட்டர்.    

கைகொடுக்காத கேப்டன் பதவி : 

இந்தியா அணியில் சவுரவ் கங்குலிக்கு பிறகு 2006 ஆம் ஆண்டு  கேப்டனாக பொறுப்பேற்ற டிராவிடின் கேப்டன் வாழ்க்கை சரியாக அமையவில்லை,சில மகத்தான வெற்றிகளை பெற்று தந்த நிலையிலும்  2007 ஆண்டு உலகக்கோப்பை தொடரில் மோசமான தோல்வியை இந்திய அணி பெற்றதால் தனது கேப்டன் பொறுப்பிலிருந்து டிராவிட் விலகினார்.

டிராவிட்டின் சில சாதனை துளிகள் : 

1)  2004 ஆம் ஆண்டு இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாடிய டெஸ்ட் போட்டியில் ராகுல் டிராவிட் அசத்தலாக விளையாடி 270 ரன்களை பதிவு செய்து, 1-1 என்று சமநிலையில் இருந்த தொடரை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தார்.

2) ராகுல் டிராவிட் டெஸ்ட் போட்டியில் உள்ள அனைத்து சர்வதேச அணிகளுக்கு எதிராகவும் சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றவர்.

3) இந்தியாவில் உள்ள இடன் கார்டன் மைதானத்தில் 2001-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பாலோ ஆன் பெற்ற நிலையில் ஜோடி சேர்ந்த டிராவிட் மற்றும் லக்ஷ்மணன் இருவரும் சிறப்பாக விளையாடி 376 ரன்களை குவித்தனர்,குறிப்பாக டிராவிட் 180 ரன்களும் லக்ஷ்மணன் 281 அடித்து  அணியை வெற்றி பெற செய்தனர்.     

4) இந்திய அணியின் சிறப்பான பேட்ஸ்மனாக மட்டும் இல்லாமல் சிறந்த பில்டர் ஆனா  டிராவிட் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 210 கேட்ச்களை பிடித்துள்ளார்.

சர்வதேச தொடரிலிருந்து ஓய்வு : 

இந்திய அணியின் டெஸ்ட் ஹீரோவாக விளங்கிய ராகுல் டிராவிட் தனது 16 ஆண்டு கால சர்வதேச கிரிக்கெட் வீரர் வாழ்க்கைக்கு 2012 ஆம்  ஆண்டு  விடை கொடுத்தார் , இந்திய கிரிக்கெட்டுக்கு மகத்தான பல சாதனைகளை செய்த டிராவிட் எந்த விட முன் அறிவிப்பும் இல்லாமல் திடீரென ஓய்வை அறிவித்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

பயிற்சியாளராக புதிய அவதாரம் : 

இந்திய அணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு தனது புதிய தொடக்கமாக  இந்திய அண்டர் -19 அணியின் பயிற்சியாளராக சிறப்பாக பணியாற்றினார் ,இப்பொழுது இந்திய அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரர்கள் எல்லாம் இவரால் பயிற்சி அளிக்கப்பட்ட சிங்கங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்பின் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக பணியாற்றிய டிராவிட் ,இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக  இருந்த ரவி சாஸ்திரிக்கு  பிறகு அந்த இடத்திற்கு பொறுப்பேற்று  அணியின் வெற்றிக்கு தேவையான முழு வேலைகளையும் சிறப்பாக செய்து வருகிறார்.

முக்கிய விருதுகள் பட்டியல்  :

1998 : அர்ஜுனா விருது 

2004 : ஐசிசி கிரிக்கெட்டர் ஆப் தி இயர் 

2004 : பத்மஸ்ரீ 

2013 : பத்ம பூஷன்  

இந்திய அணிக்காக பிளேயராக பல வெற்றிகள், பல சாதனைகள் என அனைத்து வகையிலும் பெருமைகளை பெற்று தந்து , இப்பொழுது அணியின் பயிற்சியாளராகவும் சிறப்பாக பணியாற்றி  தனது கடமைகளை அயராது செய்து வரும் இந்திய அணியின்  தி வால் என்று அழைக்கப் படும் ராகுல் டிராவிட்டை தன்னுடன் சமகாலத்தில் விளையாடிய கிரிக்கெட் வீரர்களின் மரியாதையும் , கிரிக்கெட் ரசிகர்களின் அன்பை  பெற்றவராகவும் ,இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு ரோல் மாடலாகவும் திகழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.