Representative Image.
இந்தியாவின் முக்கிய உள்நாட்டு தொடரான ரஞ்சி கோப்பை தொடர் நடந்து வரும் நிலையில், இன்று நடைபெற்ற மும்பை மற்றும் அசாம் அணிகளுக்கு இடையேயான போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் பிரிதிவ் ஷா தனது மும்பை அணிக்காக இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற அசாம் அணி பௌலிங்கை தேர்வு செய்தது,இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர்கள் பிரிதிவ் ஷா மற்றும் முஷீர் கான் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர்.
மும்பை அணியின் தொடக்க வீரர் முஷீர் கான் ஆட்டமிழந்த நிலையில் பிரிதிவ் ஷா தொடர்ந்து நிதானமாக விளையாடினார்,முதலில் 107 பந்துகளில் சதம் அடித்த ஷா தனது சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்தார்.அதன்பின் பிரிதிவ் ஷா 253 பந்துகளில் இரட்டைச் சதம் அடித்து அசத்தினார்.
மேலும் போட்டியின் முதல் நாள் முடிவில் பிரிதிவ் ஷா 240*(283) ரன்களுடன் மற்றொரு வீரரான ரஹானே 73*(140) ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்கள்.மும்பை அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 397 ரன்கள் பதிவு செய்துள்ளது.
மும்பை அணியின் 23-வயது இளம் வீரரான பிரிதிவ் ஷா முதல் தர கிரிக்கெட்டில் மொத்தம் 41-போட்டிகளில் விளையாடி 12 சதம்,15 அரைசதங்களுடன் 3300 ரன்கள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியில் பல நாட்களாக இடம்பெறாத நிலையில் இந்த சிறப்பான ஆட்டம் மீண்டும் பிரிதிவ் ஷா வின் திறமைக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.