பாகிஸ்தான் தோல்வியால் இந்தியாவுக்கு ஜாக்பாட்.. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு?

Representative Image. Representative Image.

By Sekar Published: December 06, 2022 & 13:21 [IST]

Share

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி 2023-ஜூன் மாதம் நடைபெற உள்ள நிலையில் டெஸ்ட் போட்டிகள் புள்ளிப்பட்டியல் தரவரிசையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 

கிரிக்கெட் விளையாட்டில் முக்கியமான மற்றும் அனைத்து கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்களால் விரும்பும் போட்டியாக கருதப்படுவது டெஸ்ட் போட்டி தான். ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடிய பிறகு தான் ஒரு கிரிக்கெட் வீரர் முழுமையடைகிறார் என்றே சொல்லலாம்,

ஏனென்றால் ஒரு டெஸ்ட் போட்டியில் தான் ஒரு கிரிக்கெட் வீரரின் முழுத்திறனும் வெளிப்படும். அதன் மூலமே அவர் திறனும் அறியப்படும் என்றே கூறுலாம்.

இத்தகைய மதிப்புமிக்க டெஸ்ட் தொடரைப் பெருமைப்படுத்தும் மற்றும் புதுப்பிக்கும் விதமாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடந்த முடிவானது. இதன்படி ஆகஸ்ட் 1 2019 இந்த தொடர் தொடங்கப்பட்டு  இரண்டு வருடத்திற்கு ஒருமுறை இந்த தொடரின் இறுதிப்போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. 

அதாவது இரண்டு வருடம் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளை வைத்து  இறுதி போட்டியில், அப்போது டெஸ்ட் தரவரிசையில் முதல் இரண்டு இடத்தில் இருக்கும் அணிகள் மோதும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி ஜூன் 2021 நடைபெற்ற முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து மற்றும் இந்தியா அணிகள் மோதின.

இறுதியில் நியூசிலாந்து அணி முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதி போட்டி இங்கிலாந்தில் ஜூன் 2023-ல் நடக்கவுள்ளது. இந்நிலையில் டெஸ்ட் போட்டிகள் புள்ளிப்பட்டியல் தரவரிசையில் ஐந்தாவது இடத்தில் இருந்த பாகிஸ்தான் அணி கடைசியாக இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்தது. இது பாகிஸ்தானுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதோடு, மற்ற அணிகளின் வெற்றி தோல்வியின் அடிப்படையில் தான், பாகிஸ்தானின் நிலை முடிவாகும்.

இதற்கிடையே முதல் நான்கு இடங்களில் முறையே ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இலங்கை மற்றும் இந்தியா அணிகள் வரிசையாக உள்ளன.

மேலும், பாகிஸ்தான் தனது தோல்வி மூலம் இந்திய அணிக்கு இறுதிப் போட்டிக்குச் செல்லும் வாய்ப்பை பிரகாசமாக்கிக் கொடுத்துள்ளது. இந்திய அணி இப்பொழுது வங்கதேசம் அணிக்கு எதிராக விளையாட உள்ள 2-டெஸ்ட் தொடர்களிலும் வெற்றி பெற்று ,மேலும் அடுத்தாக பிப்ரவரி மாதம் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாட உள்ள 4-டெஸ்ட் போட்டிகளில் 3-போட்டிகளில் வெற்றி பெற்றால் கூட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில்  இறுதி போட்டிக்குச் செல்லும் வாய்ப்பை பெற்றுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.             

இந்திய அணி கடந்த முறை இறுதிப் போட்டியில் அடைந்த தோல்வியைச் சரிசெய்யும் வகையில், இந்த முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் வெற்றிபெறும் நோக்கில் அனைத்து  போட்டிகளையும் எதிர்கொள்ளும் என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்களால்  நம்பப்படுகிறது.