WPL 2023 : மகளிர் பிரீமியர் லீக்கில் மிரட்டும் மும்பை இந்தியன்ஸ்..!! தொடர் சோகத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி..!!

இந்திய மண்ணில் நடைபெற்று வரும் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதிய போட்டியில் மீண்டும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி மும்பை இந்தியன்ஸ் அணி மிரட்டல் வெற்றியை பெற்று அசத்தியது.
இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்யும் என்று எதிர்பார்த்த நிலையில் மீண்டும் ஏமாற்றத்தை அளித்தது, போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா பேட்டிங் செய்ய முடிவு செய்தார். அதன்பின் களமிறங்கிய பெங்களூர் அணி வீராங்கனைகள் உடனுக்குடன் சொற்ப ரன்களில் மும்பை அணி பவுலர் இடம் தங்கள் விக்கெட்டை பறிகொடுத்தனர்.
இந்நிலையில் 18.4 ஓவர்களில் பெங்களூர் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 155 ரன்கள் பதிவு செய்தது, குறிப்பாக மும்பை அணி சார்பில் அசத்தல் பவுலிங்கை வெளிப்படுத்திய ஹேலி மேத்யூஸ் 3 விக்கெட்டுகளை பெற்று அசத்தினார். அதன்பின் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீராங்கனைகள் ஹேலி மேத்யூஸ் மற்றும் யாஸ்திகா பாட்டியா நல்ல தொடக்கத்தை அளித்தார்கள்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் அசத்தல் ஆல்ரவுண்டர்கள் ஹேலி மேத்யூஸ் மற்றும் நாட் ஸ்கிவர்-பிரண்ட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு வழி செய்தனர், இந்நிலையில் வெறும் ஒரு விக்கெட் இழப்பிற்கு 14.2 ஓவர்களில் 159 ரன்கள் பெற்று மும்பை இந்தியன்ஸ் அணி அசத்தல் வெற்றி பெற்றது.மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் ஹேலி மேத்யூஸ் 77*(38) ரன்களும் நாட் ஸ்கிவர்-பிரண்ட் 55*(29) ரன்களும் பெற்று அசத்தினார்கள்.
இந்த போட்டியின் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணியின் மாபெரும் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த இளம் வீராங்கனை ஹேலி மேத்யூஸ் ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்டார், இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த தொடரில் ஸ்மிருதி மந்தனா தலைமையில் இயங்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 2வது தோல்வியை பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.