WPL 2023: மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை கைப்பற்றி அசத்தல்..!! வரலாற்றில் இடம் பிடித்தது..!! | mi champion of wpl 2023

இந்திய மண்ணில் முதல் முறையாக நடைபெற்ற மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் சாம்பியன் பட்டத்தை மும்பை இந்தியன்ஸ் அணி வென்று அசத்தியுள்ளது, மகளிர் கிரிக்கெட் விளையாட்டை மிகவும் ஊக்குவிக்கும் வகையில் உலக அளவில் மகளிர் கிரிக்கெட்டிற்கு முக்கியத்துவம் ஏற்படுத்தும் வகையில் வெற்றிகரமாக முதல் மகளிர் பிரீமியர் லீக் தொடர் நடந்து முடிந்தது.
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் ஆரம்பத்தில் இருந்தே மிரட்டல் அணியாக பல வெற்றிகளை குவித்து வந்த மும்பை இந்தியன்ஸ் அணி தொடரின் மத்தியில் சில தோல்விகளை சந்தித்த நிலையில், மற்றொரு அணியான டெல்லி கேபிடல்ஸ் அணி அதிரடி வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடம் பிடித்து நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இதனை அடுத்து மீண்டும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்மன்பிரீத் கவுர் தலைமையில் ஆன மும்பை இந்தியன்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது, அடுத்து நடைபெற்ற தொடரின் முக்கிய நிலையான இறுதிப் போட்டியில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் பலப்பரீட்சை மேற்கொண்டார்கள். இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது.
இந்நிலையில் அசத்தல் பவுலிங் வெளிப்படுத்திய மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி அணியின் முன்னணி வீரர்கள் விக்கெட்டை பெற்று உடனுக்குடன் பெவிலியன் திருப்பியது, எனவே 9 விக்கெட் இழப்பிற்கு வெறும் 131 ரன்கள் மட்டுமே பதிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. மும்பை அணி சார்பில் சிறப்பாக பவுலிங் செய்த ஆல்ரவுண்டர் ஹேலி மேத்யூஸ் 4 ஓவர்கள் வீசி 2 ஓவர் மெய்டன் செய்து 3 விக்கெட்டுகளை பெற்றார்.
இந்த தொடரின் அசத்தல் அணியாக ஆரம்பம் முதலே விளங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய நிலையில் 19.3 ஓவர்களில் 134 ரன்கள் பதிவு செய்து வெற்றி பெற்றது. மும்பை அணியின் வெற்றிக்கு உதவும் வகையில் அதிரடி பேட்டிங் செய்த ஆல்ரவுண்டர் நாட் ஸ்கிவர்-பிரண்ட் 60*(55) ரன்கள் பெற்று வெற்றிக்கு வழிவகுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம் மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் முதல் சாம்பியன் பட்டத்தை ஹர்மன்பிரீத் கவுர் தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி கைப்பற்றி வரலாற்றில் இடம் பிடித்தது என்று கூறினால் மிகையில்லை. இந்த தொடரில் மும்பை அணியின் வெற்றிக்கு மிகவும் உதவிய ஆல்ரவுண்டர்கள் நாட் ஸ்கிவர்-பிரண்ட் மற்றும் ஹேலி மேத்யூஸ் ஆட்டநாயகி விருது மற்றும் தொடர் நாயகி விருதை முறையே பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மகளிர் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்தும் வகையில் முதல் முயற்சியாக இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் தொடங்கப்பட்ட மகளிர் பிரீமியர் லீக் தொடர் தனது முதல் சீசனை வெற்றிகரமாக நடத்தி முடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.