அடுத்த தரமான சம்பவம் காத்திருக்கு.. அபுதாபி டி-10 லீக்கில் களமிறங்கும் தல தோனி?

உலகளவில் பல விதமான கிரிக்கெட் தொடர் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் தற்போது குறிப்பாக சில தொடர்கள் கிரிக்கெட் ரசிகர்கள் இடையில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. அதற்குக் காரணம் அந்த தொடரில் பங்குபெறும் வீரர்கள் மற்றும் அந்த தொடரின் சுவாரசியமும் தான் என்று கூறலாம்.
இந்த வரிசையில் அபுதாபியில் நடந்து வரும் அபுதாபி டி-10 லீக் போட்டி ஒரு முக்கிய தொடராக மாறிவருகிறது. வருங்காலத்தில் இந்த தொடரை மேலும் பிரபலப்படுத்தும் வகையில் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த வருட அபுதாபி டி-10 தொடரில் உலகளவில் சிறந்த கிரிக்கெட் வீர்களான ஈயோன் மோர்கன், சுரேஷ் ரெய்னா, அலெக்ஸ் ஹேல்ஸ், ஆண்ட்ரே ரஸ்ஸல் பங்கேற்று அதனை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளார் என்று கூறினால் மிகையில்லை.
இந்திய கிரிக்கெட் வாரிய ஒப்பந்தத்தில் இருக்கும் வீரர்கள் வெளிநாட்டுத் தொடர்களில் பங்கேற்பதற்கு அனுமதியில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால் கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்ற இந்திய வீரர்கள் எந்த தொடரில் வேண்டுமானாலும் பங்கேற்கலாம் என்பதால், இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா இந்த தொடரில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரை தொடர்ந்து அடுத்த வருடத் தொடரில் ராபின் உத்தப்பா பங்கேற்க உள்ளதாக அபுதாபி டி10 லீக் தலைவர் ஷாஜி முல்க் தெரிவித்துள்ளார்.
இந்த தொடரை மேலும் அனைத்து கிரிக்கெட் ரசிகர்கள் இடத்திலும் கொண்டு சேர்க்கும் வகையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியையும் இந்த தொடரில் பங்கேற்க அழைப்பு விடுக்க உள்ளதாக அபுதாபி டி10 லீக் தலைவர் ஷாஜி முல்க் கூறியுள்ளார். மேலும் அவரின் வருகையால் இந்த தொடர் இந்திய மக்களிடத்திலும் உலகளவிலும் சென்றடையும் என்று அவர் கூறினார்.
ஆனால் இந்தியாவின் ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைத் தலைமை தாங்கி வரும் தோனி, இன்னும் தனது ஐ.பி.எல் ஓய்வை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அவர் ஐபிஎல்லில் இருந்து ஓய்வை அறிவித்த பிறகு தான் இது குறித்து உறுதியாக தெரிய வரும்.
இதற்கிடையே, அபுதாபி டி10 லீக் தலைவர் ஷாஜி முல்க் வரும்காலத்தில் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் பலர் இந்த தொடரில் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளார். மேலும் இது போன்ற புதிய கிரிக்கெட் தொடர்களால் பல புதிய கிரிக்கெட் வீரர்களை அடையாளம் காணவும் கூடுதலாக பல நாடுகளின் கிரிக்கெட் வீரர்கள் ஒன்றாக ஓரே களத்தில் விளையாடி தங்கள் அனுபவங்களை பகிரலாம் என்றும் நம்பப்படுகிறது.