ஐபிஎல் 2023 தொடரில் அதிகபட்ச இலக்கை பதிவு செய்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் சாதனை ..!! | lsg highest score record in ipl 2023

ஐபிஎல் அரங்கில் இன்று மொஹாலியில் நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்தலக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தியது, குறிப்பாக அணிக்கு நல்ல தொடக்கத்தை அளித்த அதிரடி வீரர் கையில் மேயர்ஸ் பஞ்சாப் பவுலர்களை துவம்சம் செய்த நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் அதிகபட்ச இலக்கை பதிவு செய்தார்கள்.
பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்த நிலையில், பேட்டிங் செய்ய களமிறங்கிய லக்னோ அணி வீரர்கள் மொஹாலி மைதானத்தில் வான வேடிக்கை நிகழ்த்தினார்கள் என்று கூறினால் மிகையில்லை, குறிப்பாக அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளிக்கும் வகையில் கையில் மேயர்ஸ் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
பஞ்சாப் பவுலர்களை முழி பிதுங்க வைத்த மேயர்ஸ் 20 பந்துகளில் அரைசதம் பதிவு செய்தார், குறிப்பாக 24 பந்துகளில் 4 சிக்ஸர் 7 பவுண்டரி உட்பட 54 ரன்கள் பெற்று அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
அதன்பின் களமிறங்கிய லக்னோ அணி வீரர்கள் ஸ்டோனிஸ் 72(40) , ஆயுஷ் படோனி 43(24) மற்றும் நிக்கோலஸ் பூரான் 45(19) ஆகியோர் அதிரடி ஆட்டத்தை தொடர்ந்த நிலையில் இமாலய இலக்கு பதிவு செய்யப்பட்டது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக மார்கஸ் ஸ்டோனிஸ் 5 சிக்ஸர் மற்றும் 6 பவுண்டரி உட்பட 40 பந்துகளில் 72 ரன்கள் பதிவு செய்தார்.இந்நிலையில் 20 ஓவர்கள் முடிவில் 257 ரன்கள் பதிவு செய்து அசத்தினார்கள். இது நடப்பு ஐபிஎல் தொடரில் அதிகபட்ச இலக்கு மேலும் மொத்த ஐபிஎல் தொடரில் 2வது அதிகபட்ச இலக்கு என்பது குறிப்பிடத்தக்கது.