ஏமாற்றத்துடன் கிளம்புகிறோம்.. விராட் கோலி உருக்கம்!!

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர பேட்டருமான விராட் கோலி, இங்கிலாந்திடம் பெற்ற படுதோல்விக்கு பிறகு, இன்று ட்விட்டரில் ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக் கோப்பை பிரச்சாரம் முழுவதும் ரசிகர்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி என உணர்ச்சிகரமான பதிவுகளை வெளியிட்டார்.
அரையிறுதியில் இங்கிலாந்திடம் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து, ஐசிசி டி20 உலகக்கோப்பை 2022 தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியாமல் டீம் இந்தியா வெளியேறிய ஒரு நாள் கழித்து அவர் இந்த பதிவுகளை வெளியிட்டுள்ளார்.
ட்விட்டரில் கோலி தனது பதிவில், "விளையாட்டு மைதானங்களில் எங்களை ஆதரித்த எங்கள் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. இந்த ஜெர்சியை அணிந்து எங்கள் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் எப்போதும் பெருமைப்படுகிறேன்." என்று தெரிவித்துள்ளார்.
அவர் மேலும், "நாங்கள் ஆஸ்திரேலியாவில் இருந்து எங்கள் கனவை அடைய முடியாமல், எங்கள் இதயங்களில் ஏமாற்றத்துடன் செல்கிறோம், ஆனால் ஒரு குழுவாக பல மறக்கமுடியாத தருணங்களை நாங்கள் பெற்றோம். மேலும் இங்கு பெற்ற பாடத்தின் மூலம் இனி வரும் காலங்களில் சிறப்பாக செயல்பட்டு முன்னேறுவோம்." என்று மற்றொரு ட்வீட்டில் கூறினார்.
இந்தியாவின் வெளியேற்றம் ரசிகர்களையும், வீரர்களையும் உணர்ச்சிவசப்பட வைக்கிறது
முன்னதாக நேற்று, இந்திய அணி போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு அதிக உணர்ச்சிவசப்பட்டனர். போட்டி முடிந்ததும், இந்திய கேப்டன் ரோகித் சர்மாவும் அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் செல்ல முடியாமல் டக் அவுட்டில் கண்ணீருடன் காணப்பட்டார்.
அடிலெய்டில் நடந்த போட்டியின் முடிவுக்குப் பிறகு, தலை குனிந்து கண்ணீருடன் இருக்கும் ரோஹித் ஷர்மாவின் உணர்ச்சிகரமான வீடியோ, சமூக ஊடகங்களில் பரவியது குறிப்பிடத்தக்கது.