Representative Image.
மிர்பூர் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இம்பாக்ட் பிளேயர் விதி இருந்திருந்தால், சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவை களத்திற்குள் கொண்டு வந்திருப்பேன் என்று இந்திய அணியின் ஸ்டாண்ட்-இன் கேப்டன் கே.எல்.ராகுல் கூறியுள்ளார்.
ஜெய்தேவ் உனட்கட் சேர்க்கப்பட்டது குறித்து பேசிய கே.எல்.ராகுல்
சட்டோகிராமில் நடந்த முதல் டெஸ்டில் எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தியதற்காக ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட குல்தீப் யாதவை, யாரும் எதிர்பாராத வகையில் இரண்டாவது டெஸ்டில் அணி நிர்வாகம் நீக்கிவிட்டு, ஜெயதேவ் உனத்கட்டை களமிறக்கியது. இந்த முடிவு ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் நிபுணர்களிடமிருந்து கடுமையான விமர்சனங்களை பெற்றது.
இந்நிலையில், விமர்சனங்களுக்கு பதிலளித்த கே.எல்.ராகுல், "ஐபிஎல்லைப் போல் இங்கும் இம்பாக்ட் பிளேயர் நடைமுறை இருந்திருந்தால், இரண்டாவது இன்னிங்ஸில் குல்தீப் விளையாடுவதை நான் விரும்பியிருப்பேன்" என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், "முதல் நாள் காலை, அவர் எங்களுக்கு சட்டோகிராம் டெஸ்டில் வெற்றியை தேடித் தந்தவர் என்பதை அறிந்தும், இந்த கடினமான நடவடிக்கையை எடுக்க வேண்டியதாகி விட்டது. ஆட்டத்திற்கு முன்பும் முதல் நாளிலும் ஆடுகளத்தைப் பார்த்ததும், வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் இருவரும் ஆட்டத்திற்கு உதவியாக இருக்கும் என்று நாங்கள் உணர்ந்தோம்.
அதை மனதில் வைத்து நாங்கள் எங்களால் முடிந்த சிறந்த சமநிலையான அணியை விளையாட விரும்பினோம். அதற்காகத்தான் குல்தீப் யாதவை வெளியே உட்காரவைத்து, உனத்கட்டை உள்ளே இறக்கினோம்" என்று கூறினார்.
"நான் வருந்தவில்லை, அது சரியான முடிவு. நாங்கள் எடுத்த 20 விக்கெட்டுகளைப் பார்த்தால், வேகப்பந்து வீச்சாளர்கள் கூட நிறைய விக்கெட்டுகளை எடுத்தார்கள். அவர்களுக்கு நிறைய உதவி இருந்தது மற்றும் நிறைய சீரற்ற தன்மை இருந்தது. இந்த முடிவுகள் அனைத்தும் இங்கு ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அனுபவத்தை மனதில் வைத்து எடுத்தோம்.” என்று அவர் மேலும் கூறினார்.
இருப்பினும், 12 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இந்திய அணிக்கு ஆட வந்த உனத்கட் ஏமாற்றமளிக்கவில்லை. முதல் இன்னிங்ஸில் 2/50 மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் 1/17 என்ற எண்ணிக்கையுடன் முடித்தார்.