கேன் வில்லியம்சன் எடுத்த அதிரடி முடிவு.. நியூசிலாந்து கிரிக்கெட் அணியில் புதிய மாற்றம்!!

Representative Image. Representative Image.

By Sekar Published: December 15, 2022 & 12:21 [IST]

Share

முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் தனது அணியைச் சிறப்பாக வழிநடத்தி  வெற்றியை நோக்கி அழைத்துச் சென்று சாம்பியன் பட்டத்தைப் பெற்றுத் தந்த பெருமைக்குரிய நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விலகியுள்ளார்.

நியூசிலாந்து அணியின் கேப்டனாக இருந்த பிரண்டன் மெக்கல்லம் தனது ஓய்வை அறிவித்தபோது கேப்டன் பதவியைப் பெற்ற கேன் வில்லியம்சன் தொடர்ந்து பல வருடங்களாகத் தனது அணியை அனைத்து தரப்பு போட்டிகளிலும் வழிநடத்தி வருகிறார். 

இந்நிலையில் கேன் வில்லியம்சன் டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. மேலும் அவர் தொடர்ந்து டி-20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் நியூசிலாந்து அணிக்கு கேப்டனாக செயல்படுவார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த முடிவைக் குறித்து கேன் வில்லியம்சன் அளித்த பேட்டியில், டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகும் முடிவைத் தானே முன்வந்து நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் அறிவித்ததாகக் கூறினார். மேலும் அனைத்து தரப்பு போட்டிகளிலும் அணியை வழிநடத்தும் பணிச் சுமையைச் சற்று குறைக்கும் விதமாக இந்த முடிவை எடுத்தாக அவர் கூறினார்.

நியூசிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டனாக இத்தனை ஆண்டுகள் இருந்தது தனக்கு அளிக்கப்பட்ட சிறப்பு மரியாதை என்றும், டெஸ்ட் கேப்டனாக இருந்து அணியை பல தருணங்களில் வழி நடத்தியது எப்பொழுதும் தனது வாழ்வில் மகிழ்ச்சியான தருணங்கள் என்றும் கூறினார். 

இதனைத் தொடர்ந்து நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் சார்பில் டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி நியமிக்கப்பட்டுள்ளார். 

அவருக்கு உதவும் வகையில் துணை கேப்டனாக டாம் லாதம் செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து அணி அடுத்தாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக 2-டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3-ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கவுள்ளது. அந்த டெஸ்ட் போட்டியிலிருந்து  டிம் சவுதி கேப்டனாக செயல்படுவர் என்று நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

இதுவரை நியூசிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டனாக இருந்த கேன் வில்லியம்சன் 38 போட்டிகளில் அணியை வழிநடத்தி 22 போட்டிகளில் வெற்றி பெற்று, 8 போட்டிகளில் டிரா செய்து, 10 போட்டிகளில் தோல்வியைப் பெற்றுத் தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இவர் தலைமையில் நியூசிலாந்து அணி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடம் பிடித்து ,சாம்பியன்ஷிப் பட்டத்தையும் பெற்றுப் பல சாதனைகளைச் செய்துள்ளது. நியூசிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த கேப்டன்கள் வரிசையில் இவரது பெயர் என்றும் நிலை பெற்றிருக்கும் என்பதில் ஐயமில்லை.