அதிக இரட்டை சதமடித்த வீரர்களில் முதலிடம்.. கேன் வில்லியம்சன் புது ரெகார்ட்!!

கராச்சியில் நடந்து வரும் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் கேன் வில்லியம்சன் இரட்டை சதம் அடித்து, அதிக டெஸ்ட் இரட்டை சதங்கள் அடித்த நியூசிலாந்து வீரர்கள் பட்டியலில் பிரண்டன் மெக்கல்லத்தை முந்தி முதலிடம் பிடித்தார்.
இந்த மாத தொடக்கத்தில் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகிய கேன் வில்லியம்சன், முதல் டெஸ்டின் நான்காவது நாளில் இந்த சாதனையை நிகழ்த்தினார். கேன் வில்லியம்சன் இப்போது டெஸ்டில் ஐந்து இரட்டை சதம் அடித்துள்ளார். இது மெக்கலத்தை விட ஒன்று அதிகம் ஆகும்.
இதற்கிடையே பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் 174 ரன்கள் முன்னிலையுடன் நியூசிலாந்து 612/9 என டிக்ளேர் செய்தது. வில்லியம்சன் 200 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
முன்னதாக, நியூசிலாந்தின் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்திற்கு சில நாட்களுக்கு முன்னதாக, டிசம்பர் 15, 2022 அன்று கேன் வில்லியம்சன் நியூசிலாந்தின் டெஸ்ட் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் வில்லியம்சனுக்கு பதிலாக புதிய கேப்டனாக டிம் சவுத்தியை நியமித்தது.
வில்லியம்சனின் தலைமையின் கீழ், ஆகஸ்ட் 2021 இல் லார்ட்ஸில் நடந்த இறுதிப் போட்டியில் இந்தியாவை தோற்கடித்து, நியூசிலாந்து முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை (WTC) கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.