நான்கு வருடமாக டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தில் இருந்த பேட் கம்மின்ஸ் சறுக்கல் ..!! முதல் இடம் பிடித்த 40 வயது வீரர்..!!

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பவுலர்கள் தரவரிசையில் நான்கு ஆண்டுகளாக முதல் இடத்தில் இருந்த பேட் கம்மின்ஸை பின்தள்ளி 40 வயது அனுபவ வீரர் முதலிடம் பிடித்து அசத்தினார், கிரிக்கெட் நிபுணர்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மற்றும் முன்னணி பௌலர் பேட் கம்மின்ஸ் ஐசிசி டெஸ்ட் பவுலர்கள் தரவரிசையில் தொடர்ந்து நான்கு ஆண்டுகளுக்கு மேல் முதல் இடத்தில் இருந்து வந்தார், தற்போது இங்கிலாந்து அணியின் முன்னணி பவுலர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 866 புள்ளிகளுடன் ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.
ஜேம்ஸ் ஆண்டர்சன் டெஸ்ட் அரங்கில் பதிவான 87 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார், கடைசியாக 1936 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் கிரேட் கிளாரி கிரிம்மெட் அதிக வயதில் நம்பர் 1 டெஸ்ட் பவுலராக முன்னேறி சாதனை படைத்த நிலையில் தற்போது ஆண்டர்சன் 40 வயதில் நம்பர் 1 பவுலர் இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து பவுலர் 7 விக்கெட்டுகள் பெற்ற நிலையில் , தனது 40 வயதில் உலகின் நம்பர் 1 டெஸ்ட் பவுலராக முன்னேறி புதிய மைல்கல்லை அடைந்துள்ளார்.இந்திய அணியின் பௌலர் ரவிச்சந்திரன் அஸ்வின் 864 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ள நிலையில்,ஆஸ்திரேலியா அணியின் பேட் கம்மின்ஸ் 858 புள்ளிகளுடன் 3 வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
சர்வதேச அளவில் 682 டெஸ்ட் விக்கெட் களுடன் ஜேம்ஸ் ஆண்டர்சன் டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகள் பெற்ற வீரர்கள் பட்டியலில் 3 வது இடத்தில் உள்ளார், இந்த பட்டியலில் முதல் மற்றும் இரண்டாவது இடத்தில் 800 விக்கெட்களுடன் முத்தையா முரளிதரன் மற்றும் 708 விக்கெட்களுடன் ஷேன் வார்ன் ஆகிய இருவரும் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.