ஐ.பி.எல் 2023 : ஏலத்தில் நடந்த சுவாரசிய சம்பவங்கள்,அணிகளின் வியூகம்,ஏமாற்றமளித்த வீரர்கள் என அனைத்தையும் குறித்த ஒரு பார்வை..!

ஐ.பி.எல் 2023 தொடருக்கான ஏலம் கொச்சியில் மிகவும் விமர்சியாக நடந்து முடிந்தது,தொடரில் பங்கேற்ற 10-அணிகளும் தங்களுக்குத் தேவையான வீரர்களை வாங்க போட்டிப் போட்ட நிலையில் ஐ.பி.எல் வரலாற்றிலேயே அதிக விலைக்கு ஒரு வீரரை விற்ற ஏலமாக இது பதிவானது.
இந்த ஐ.பி.எல் ஏலத்தில் கலந்து கொள்ள மொத்தமாக 991-வீரர்கள் பதிவு செய்திருந்த நிலையில்,அனைத்து அணிகளிடமும் கலந்து ஆலோசித்த பின் 405-வீர்ர்களை ஏலத்தில் பங்கேற்க பி.சி.சி.ஐ நிர்வாகம் தேர்வு செய்தது.இந்நிலையில் 10- அணிகளில் மீதம் இருந்த 87 இடங்களை நிரப்ப ஏலம் தொடங்கியது.
இறுதியாக ஏலத்தின் முடிவில் 167-கோடிகள் செலவில் 80 வீரர்களை ஏலத்தில் பங்கேற்ற அணிகள் வாங்கினார்கள்,அந்த பட்டியலில் 27-வெளிநாட்டு வீரர்களும் அடங்குவார்கள்.இந்த ஏலத்தில் சிறப்பாகச் செயல்பட்டு வாங்கிய அணிகள்,கோடிகளில் மிதந்த வீரர்கள்,பெரிதாக எதிர்பார்க்கப்பட்டு விற்கப்படாமல் போன வீரர்கள் என அனைத்து சுவாரசிய தகவல்களையும் காண்போம்.
மினி ஏலத்தில் மில்லியனர் ஆனா வீரர்கள்:
1) இந்த ஏலத்தில் கிரிக்கெட் வட்டாரங்களில் எதிர்பார்க்கப்பட்டது போலவே ஆல்ரவுண்டர்களை வாங்க அனைத்து அணிகளும் போராடினார்கள்.அதிலும் ஏலத்தில் அதிக தொகையுடன் பங்கேற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி போட்டிப்போட்டுக் கொண்டு 18.5 கோடி ரூபாய் செலவு செய்து இங்கிலாந்து நாட்டின் இளம் ஆல்ரவுண்டரான சாம் கர்ரனை வாங்கினார்கள்.
இந்த வருடம் முழுவதும் சிறந்த பார்மில் விளையாடி வரும் சாம் கர்ரன் கண்டிப்பாகப் பஞ்சாப் கிங்ஸ் அணிக்குப் பக்கபலமாக இருப்பார் என்பதில் ஐயமில்லை,எனினும் ஐ.பி.எல் வரலாற்றில் அதிக விலைக்கு போன வீரர் என்பதால் அந்த பாரம் மற்றும் அனைவரின் எதிர்பார்ப்பு உள்ளிட்டவை இவரின் ஆட்டத்தை கெடுக்காமல் இருக்க வேண்டும் என்ற நிலையும் யோசிக்க வேண்டிய ஒன்று தான்.
2) அதன்பின் மும்பை இந்தியன்ஸ் அணியால் 17.5 கோடி ரூபாவிற்கு வாங்கப்பட்ட கேமரூன் கிரீன் பொல்லர்டின் இடத்தை நிரப்புவாரா என்று கேள்வி எழுந்துள்ளது.இதுவரை ஆஸ்திரேலியா அணிக்காக சிறப்பான பங்களிப்பை அளித்துள்ள கேமரூன் கிரீன் ஐ.பி.எல் தொடரிலும் மும்பை அணிக்குச் சார்பில் மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்துவர் என்று நம்பப்படுகிறது.
3) அதனைத் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 16.25 கோடி ரூபாவிற்கு வாங்கப்பட்ட இங்கிலாந்து அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் சென்னை அணியின் பிராவோ இடத்திற்கு பக்காவாக பொருந்துவர்.அதேபோல் தோனிக்கு பிறகு சென்னை அணியின் கேப்டனாகவும் செயல்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
4) சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் கடுமையான போட்டிக்குப் பிறகு 13.25 கோடிக்கு வாங்கப்பட்ட இங்கிலாந்து அணியின் இளம் வீரர் ஹாரி புரூக், இந்த வருடம் முழுவதும் சிறந்த பார்மில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார் அதனால் அவருக்காக அணிகள் போட்டிப் போட்டதில் ஆச்சரியம் இல்லை.இவர் ஹைதராபாத் அணிக்குச் சிறப்பான பங்களிப்பை அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.பி.எல் அணிகளின் ஸ்மார்ட் மூவ்:
1) கடந்த ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி ஏலத்தில் சிறப்பாகச் செயல்பட்டு நியூஸிலாந்து வீரர் கேன் வில்லியம்சனை வெறும் 2 கோடிக்கு வாங்கினார்கள்.அதே போல் அயர்லாந்து அணியின் பௌலர் ஜோசுவா லிட்டிலை 4.4 கோடிக்கு வாங்கி அணியின் பௌலிங்கையும் வலுப்படுத்தினர்.
2) டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் சிறப்பாகச் செயல்பட்டு அதிரடி பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட்கீப்பீர் பில் சால்டையும் ,ஏலத்தின் இரண்டாவது சுற்றில் பேட்ஸ்மேன் ரிலீ ரோசோவையும் வாங்கி அசத்தினார்கள்.
3) மும்பை இந்தியன்ஸ் அணியில் ஏற்கனவே அதிரடி பௌலர்கள் இருக்கும் வேளையில் அதனை வலுப்படுத்தும் விதமாக ஜே ரிச்சர்ட்ஸனையும் ,அனுபவ ஸ்பின் வீரர் பியூஷ் சாவ்லாவையும் வாங்கினார்கள்.
4) சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி துரிதமாகச் செயல்பட்டு மிரட்டல் தொடக்க வீரர் மயங்க் அகர்வாலையும் இங்கிலாந்து அணியின் சிறந்த ஸ்பின்னர் அடில் ரஷிதையும் வாங்கி அணிக்கு வலு சேர்த்தார்கள்.
5) கொல்கத்தா அணி சிறந்த பார்மில் இருக்கும் தமிழக வீரர் என்.ஜெகதீசனையும் ,வங்கதேச வீரர் லிட்டன் தாஸையும் வாங்கி அசத்தினார்கள்.
6) லக்னோ அணி சார்பில் மிகவும் அதிக விலை கொடுக்கப்பட்டு நிக்கோலஸ் பூரனை வாங்கியது அனைவரும் விமர்சித்தாலும், அணியின் வெற்றியை உறுதி செய்யும் வீராக அவர் செயல்படுவர் என்ற நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் உள்ளது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்டு விற்கப்படாமல் போன வீரர்கள்:
ஐ.பி.எல் ஏலத்தில் கண்டிப்பாக அணிகளால் வாங்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விற்கபடாமல் ஏமாற்றம் அளித்த வீரர்கள்
1) இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் டாம் பான்டன் மற்றும் டேவிட் மாலன் ஆகியோரும் எந்த அணியாலும் வாங்கப்படாமல் ஏமாற்றம் அளித்தார்கள்.
2) ஐ.பி.எல் தொடரில் இதுவரை சிறந்த பங்களிப்பை அளித்து வந்த இந்திய பௌலர் சந்தீப் சர்மாவையும் எந்த அணியும் வாங்கவில்லை.
3) ஆப்கானிஸ்தான் அணியின் முன்னனி ஆல்ரவுண்டர் முகமத் நபியையும் நியூஸிலாந்து நாட்டின் ஜிம்மி நீஷமையும் எந்த அணியும் வாங்கவில்லை.
மேலும் ஐ.பி.எல் தொடரில் கடந்த ஆண்டுகளில் சிறப்பாகப் பங்களித்த பல முன்னனி வீரர்களையும் அணிகள் எல்லாம் வாங்காமல் தவிர்த்தனர்,எனவே ஏலத்தில் யாரை வாங்க வேண்டும் என்று முன் கூட்டியே ஒரு வியூகத்துடன் அணிகள் இந்த ஏலத்தில் களமிறங்கியது தெளிவாகத் தெரிகிறது.
இந்த ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்களும் ,அணிகள் நம்பிக்கையுடன் வாங்கிய வீரர்களும், அதற்கு ஏற்றார் போல் தங்களின் பங்களிப்பை அணிகளின் வெற்றிக்காக அளிப்பார்கள் என்று அணி நிர்வாகமும் அணிகளின் ரசிகர்களும் மிகவும் எதிர்பார்க்கிறார்கள்.