IPL 2023 : எப்படியாவது விளையாடிய ஆகணும்.. அடிப்படை ஏலத் தொகையை குறைத்த கிரிக்கெட் வீரர்கள்!!

IPL 2023 : இந்தியாவில் நடைபெறும் முக்கிய கிரிக்கெட் தொடர்களில் ஒன்றான ஐ.பி.எல் தொடர் வெற்றிகரமாக 15-சீசன்களை கடந்து, அடுத்த ஆண்டு 2023-ல் ஏப்ரல் மாதத்தில் 16-வது சீசனைத் தொடங்கவுள்ளது.
இந்நிலையில் அண்மையில் ஐ.பி.எல் தொடரில் உள்ள அணிகள் தங்கள் அணிகளில் தக்க வைக்கப்பட்ட வீரர்கள் மற்றும் தங்கள் அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டனர்.அதனைத் தொடர்ந்து அடுத்தகட்டமாக ஐ.பி.எல் 2023 தொடருக்காக வீரர்களை எடுக்கும் மினி ஏலம் கொச்சியில் நடக்கவுள்ளது.
இந்த மினி ஏலத்தில் பங்குபெற மொத்தமாக 991-கிரிக்கெட் வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இந்த ஏலத்தில் அணிகளின் உரிமையாளர்கள் எல்லாம் குறைந்த தொகையைத் தான் வைத்திருப்பதால் தங்களுக்குத் தேவையான வீரர்கள் எடுப்பதில் மட்டும் தான் ஆர்வம் காட்டுவார்கள்,என்பதை நன்கு உணர்ந்து வீரர்கள் பலர் தங்களுக்கான அடிப்படை விலையை குறைத்துள்ளனர்.
அப்படி அடிப்படை விலையைக் குறைந்துள்ள முக்கிய நான்கு வீரர்களைப் பற்றிக் காண்போம்.
1) மனிஷ் பாண்டே:
ஐ.பி.எல் தொடரில் தனது நேர்த்தியான ஆட்டத்தினால் பல ரசிகர்களைக் கவர்ந்த வீரர்களில் முக்கியமான ஒருவராக இருப்பவர் மனிஷ் பாண்டே. அவர் ஐ.பி.எல் தொடரில் அதிகமாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி பலநேரங்களில் வெற்றியைத் தேடிக் கொடுத்துள்ளார். கூடுதலாக ஐ.பி.எல் தொடரில் இளம் வயதிலேயே சதமும் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், சில வருடங்களாகத் தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். கடந்த வருடம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடிய இவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தவறினர். மேலும் அந்த அணியிலிருந்தும் விடுவிக்கப்பட்டார். இதனை உணர்ந்த மனிஷ் பாண்டே தன்னை அணிகள் எடுக்கும் வாய்ப்பை உறுதி செய்யும் விதமாக, இந்த ஐ.பி.எல் 2023 ஏலத்தில் தனது அடிப்படை விலையை 1 கோடிலிருந்து 50 லட்சமாக மாற்றியுள்ளார் என்று கருதப்படுகிறது.
2)அஜிங்கிய ரஹானே:
ஐ.பி.எல் தொடரில் சதம் அடித்த சில வீரர்களில் ஒருவராக இருப்பவர் அஜிங்கிய ரஹானே. இவர் ஐ.பி.எல் தொடரில் இரண்டு சதங்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் சமீப காலமாக டெஸ்ட் அணியில் மட்டுமே விளையாடி வரும் இவர், ஐ.பி.எல் போட்டிகளில் சிறப்பான பங்களிப்பை ஏதும் வழங்கவில்லை. கடந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சார்பில் விளையாடிய ரஹானே 7 போட்டிகளில் 133 ரன்களை மட்டுமே அடித்தார். இதனால் அந்த அணியிலிருந்து இந்த ஆண்டு விடுவிக்கப்பட்டார். எனவே விரைவில் நடக்கவிருக்கும் ஐ.பி.எல் ஏலத்தில், தன் நிலையை உணர்ந்து தனது அடிப்படை விலையை 1 கோடியிலிருந்து 50 லட்சமாக மாற்றியுள்ளார்.
3) மயங்க அகர்வால்:
ஐ.பி.எல் தொடரில் கடந்த சில ஆண்டுகளாகப் பஞ்சாப் கிங்ஸ் அணி சார்ப்பில் சிறப்பாக விளையாடி வந்த மயங்க அகர்வால், கடந்த ஐ.பி.எல் 2022 தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டார். அதனால் போட்டிகளில் தனது ஆட்டத்தில் சிறப்பாகப் பங்களிக்க முடியவில்லை. இதனை தொடர்ந்து பஞ்சாப் கிங்ஸ் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். மயங்க அகர்வால் தனது துரிதமான ஆட்டத்தினால் ஒரு போட்டியின் போக்கையே மாற்றும் திறமையுடைய வீரர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.
இந்த 2023 ஏலத்தில் பல ஐ.பி.எல் அணிகள் கண்டிப்பாக மயங்க அகர்வாலை வாங்க முற்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அவரும் தனது அடிப்படை விலையை 1 கோடியாகக் குறைத்துக்கொண்டு வரும் ஐ.பி.எல் ஏலத்தில் பங்கேற்க உள்ளார்.
4) கெய்ல் ஜமீசன்:
கடந்த 2021-ஆம் ஆண்டு நடந்த ஐ.பி.எல் போட்டியில் பெங்களூர் அணி சார்பில் அதிகமாக 15 கோடிகளுக்கு வாங்கப்பட்ட நியூஸிலாந்து அணியைச் சேர்த்த ஆல்-ரவுண்டர் கெய்ல் ஜமீசன், மொத்தமாக 2021 தொடரில் 9-போட்டிகளில் 9-விக்கெட்டுகளை எடுத்து பேட்டிங்கில் 65-ரன்களை மட்டும் தான் அடித்தார். மேலும் 2022-சீசனில் பங்கேற்கவும் இல்லை .
பெங்களூர் அணி எதிர்பார்த்த அளவுக்கு ஜமீசன் சிறந்த பங்களிப்பை அளிக்காததால் பெங்களூரு அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் ஐ.பி.எல் 2023 ஆண்டிற்கான ஏலத்தில் பங்கேற்கத் தனது அடிப்படை விலையை 1.5 கோடியிலிருந்து 1-கோடியாக மாற்றிப் பதிவு செய்துள்ளார்.
ஐ.பி.எல் தொடரில் தங்கள் பங்களிப்பு கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று கருதித் தான் வீரர்கள், தங்கள் அடிப்படை விலையைக் குறைத்திருக்கலாம் என்று கிரிக்கெட் வட்டாரங்களில் கூறப்படுகிறது.