Representative Image.
IPL 2023 : இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல் டி-20 தொடர் இங்கு மட்டுமில்லாமல் உலகளவிலும் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டுள்ளது. அதே போல் பல வெளிநாட்டு வீரர்களும் இந்த தொடரில் விளையாட மிகவும் ஆர்வமாக உள்ளார்கள்.
இந்நிலையில் 2023-ஆம் ஆண்டு நடக்கும் ஐ.பி.எல் தொடருக்கான மினி ஏலம் இன்று கொச்சியில் நடக்கவுள்ளது. அந்த ஏலத்தில் கலந்து கொள்ள மொத்தமாக 991-வீரர்கள் பதிவு செய்திருந்தனர். ஐ.பி.எல் நிர்வாகம் தொடரில் பங்குபெறும் அணிகளிடம் கலந்துகொண்ட பிறகு இறுதியாக 405-வீரர்கள் ஏலத்தில் கலந்து கொள்ளத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள் என்று அறிவித்தது. அதில் 132 வெளிநாட்டு வீரர்கள் உள்ளனர்.
முதலில் ஐ.பி.எல் நிர்வாகம் 369 வீரர்களையே ஏலத்தில் கலந்துகொள்ள தேர்ந்தெடுத்த நிலையில், தொடரில் உள்ள 10-அணிகள் சார்பில் 36 வீரர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுச் சேர்க்கப்பட்டது. இந்த இறுதி பட்டியலில் இடம்பெற்றுள்ள வீரர்களில் மிகவும் இளம் வீரர் மற்றும் வயதான வீரர் பற்றிக் காண்போம்.
1.15-வயது இளம் வீரர்:
ஐ.பி.எல் தொடரில் பங்கேற்பதன் மூலம் தன் திறமையை உலகளவில் நிரூபிக்கலாம் என்பதாலும், தொடரில் பங்கேற்கும் அனைத்து நாட்டு முன்னனி வீரர்களின் அனுபவங்களையும் பெறலாம் என்பதாலும், இதில் தனது பெயரை அளித்துள்ளதாக ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த 15-வயது இளம் வீரர் அல்லா முகம்மது கசன்ஃபர் தெரிவித்துள்ளார்.
இவர் ஆப்கானிஸ்தான் நாட்டின் 19-வயதினருக்கு உட்பட்ட அணிக்கு ஸ்பின் பௌளராக பயிற்சியில் பந்து வீசி வருகிறார். மேலும் 6 அடி 2 அங்குல உயரமுள்ள இவர் தனது நாட்டின் முக்கிய அணியில் இடம்பெறவில்லை என்றாலும் அண்மையில் நடந்த ஷ்பகீசா கிரிக்கெட் லீக்கில் ஹினுகுஷ் ஸ்டார்ஸுக்கு எதிரான போட்டியில் 15 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் தனது பெயரைப் நிலை நிறுத்தினார்.
ஆப்கானிஸ்தான் அணியின் இளம் நட்சத்திரங்கள் ரஷித் கான் மற்றும் முஜீப் உர் ரஹ்மான் ஆகியோர் இதுவரை ஐ.பி.எல் தொடரில் சிறப்பாக தங்களின் திறமையை வெளிப்படுத்தி வருவதால் அல்லா முகம்மது மீதும் அணிகளின் கவனம் திரும்பி உள்ளது. மேலும் இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது ரோல் மாடல் என்றும் அல்லா முகம்மது கூறியுள்ளார். இவர் இந்த ஏலத்தில் தனது அடிப்படை விலையாக 20-லட்சத்தை நியமித்துள்ளார்.
2.40-வயது அனுபவ வீரர்:
ஐ.பி.எல் தொடரில் இதுவரை பல அணிகளுக்காக விளையாடி ஸ்பின் ஜாம்பவனாக விளங்கும் அமித் மிஸ்ரா தான் இந்த ஏலத்தில் பங்கேற்கும் அதிக வயதான அனுபவ வீரர். இவர் 40-வயது மிக்க அனுபவ வீரர் இதுவரை ஐ.பி.எல் தொடரில் 3-முறை ஹாட்ரிக் விக்கெட்களை கைப்பற்றி அசத்தியுள்ளார். மேலும் ஐ.பி.எல் தொடரில் 154-போட்டிகளில் 166-விக்கெட்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமித் மிஸ்ரா ஒரு அனுபவ வீரர் என்பதாலும் சிறந்த ஐ.பி.எல் ரெகார்ட் வைத்துள்ளதாலும் கண்டிப்பாக இந்த ஏலத்தில் எதாவது ஒரு அணியில் இடம்பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர் தனது அடிப்படை விலையாக 50-லட்சத்தை நியமித்துள்ளார்.
இந்தியாவின் ஐ.பி.எல் தொடரில் பங்கேற்க உலகளவில் இருக்கும் அனைத்து முன்னனி மற்றும் இளம் வீரர்கள் காட்டும் ஆர்வத்தைப் பார்க்கும் பொழுது, இந்த தொடரின் முக்கியத்துவத்தையும் வெற்றியையும் அறியமுடிகிறது.