ஐ.பி.எல் 2023: இம்பேக்ட் பிளேயர் விதிமுறையைத் தெளிவு படுத்திய பி.சி.சி.ஐ நிர்வாகம்..!

Representative Image. Representative Image.

By Sekar Published: December 23, 2022 & 12:22 [IST]

Share

IPL Impact Player Rule Explanation : ஐ.பி.எல் தொடரின் 16-வது சீசன் 2023-ஆம் ஆண்டு நடக்கவுள்ள நிலையில் பி.சி.சி.ஐ நிர்வாகம் தொடரின் ஆர்வத்தை ரசிகர்களிடையே கூட்டும் வகையில் புதிய நடைமுறையாக இம்பேக்ட் பிளேயர் என்ற விதிமுறையை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த விதிமுறையால் அணிகளிடைய பல குழப்பங்கள் நிலவியதால் பி.சி.சி.ஐ  நிர்வாகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டு புதிய விதியில்  உள்ள அம்சங்களைத் தெளிவாகத் தெரிவித்துள்ளது. 

ஒரு போட்டி நடந்து கொண்டிருக்கும் போது ஆட்டத்தின் போக்கை தங்களுக்குச் சாதகமாக மாற்றும் வகையில் களத்தில் இருக்கும் ஒரு வீரருக்குப் பதிலாக மற்றொரு வீரரைக் களமிறக்கி போட்டியின் இறுதிவரை விளையாட வைக்கலாம். அப்படி ஆட்டத்தின் நடுவில் களமிறங்கும் வீரரைத் தான் "இம்பேக்ட் பிளேயர்" என்று அழைப்பார்கள். இந்த நடைமுறை போட்டியில் விளையாடும் இரண்டு அணிகளுக்கும் பொருந்தும்.

இந்த புதிய இம்பேக்ட் பிளேயர் நடைமுறை அறிவித்த பொழுது பி.சி.சி.ஐ நிர்வாகம்  ஆட்டத்தின் நடுவில் இம்பேக்ட் பிளேயராக ஒரு இந்திய வீரரைத் தான் களமிறக்க வேண்டும் என்று தொடரில் பங்கேற்கும்  அணிகளுக்குத் தெரிவித்துள்ளது. ஏனென்றால் ஐ.பி.எல் தொடர்களில் நடக்கும் போட்டிகளில் விளையாடும் நபர்களை அறிவிக்கும் போது  ஒரு அணியில்  இடம்பெற்றுள்ள 11-வீரர்களில் அதிகபட்சம் 4-வெளிநாட்டு வீரர்கள் தான் இருக்க வேண்டும் என்பது முக்கிய விதியாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.   

இந்நிலையில் புதிய விதியாக அறிமுகப்படுத்தியுள்ள "இம்பாக்ட் பிளேயர்" நடைமுறையால்,போட்டியில் விளையாடும் அணிகள் 11-வீரர்களோடு சேர்த்து 4-வீரர்களையும் முன்னதாகவே அறிவிக்க  வேண்டும். இதனால் அந்த நான்கு வீரர்களிலும் வெளிநாட்டு வீரர்களை அறிவித்து விட்டால், ஐ.பி.எல் தொடரின் முக்கிய விதி பாதிக்கப்படுகிறது. எனவே தான் பி.சி.சி.ஐ  நிர்வாகம் அந்த 4-வீரர்களும் இந்திய வீரர்களாக இருக்க வேண்டும் என்று கட்டாயமாகக் கூறியுள்ளது. இதனால் கண்டிப்பாக இந்திய வீரர்கள் தான்  இம்பேக்ட் பிளேயராக நியமிக்கப்பட வேண்டும் என்பது உறுதியானது.

 இந்த விதிமுறையில் சில மாற்றங்களைச் செய்து பி.சி.சி.ஐ நிர்வாகம் அண்மையில் அறிவித்தது. அதன்படி ஒரு போட்டி தொடங்கும் முன் அறிவிக்கப்படும் 11-வீரர்களில் 4-வெளிநாட்டு வீரர்கள் எண்ணிக்கையைக் குறைத்து அந்த இடத்திலும் இந்திய வீரர்கள் இடம்பெற்றிருந்தால், அப்பொழுது மட்டும் இம்பாக்ட் பிளேயராக களமிறங்க உள்ள 4-பேர் கொண்ட பட்டியலில் வெளிநாட்டு வீரர்களையும் அறிவிக்கலாம் என்று தெளிவுபடுத்தியுள்ளது பி.சி.சி.ஐ நிர்வாகம்.

ஒரு போட்டியில் இம்பேக்ட் பிளேயர் களமிறங்குவது குறித்த சில விளக்கங்கள்:

1)ஒரு இம்பாக்ட் பிளேயரை அணியின் கேப்டன் நாமினேட் செய்வார்.

2) ஒரு போட்டி தொடங்கும் முன்னரும் அறிவிக்கப்பட்ட  ஒரு வீரருக்குப் பதிலாக  ஆட்டத்தில் இறங்கலாம். 

3) ஒரு ஓவர் முடிந்த பிறகும் ஆட்டத்தில் இறங்கலாம்.

4) ஒரு பேட்ஸ்மேனாக இம்பேக்ட் பிளேயர் களமிறங்க வேண்டுமானால் ஒரு விக்கெட் விழுந்த பிறகு களமிறங்கலாம் அல்லது ஒரு வீரர் போட்டியின் நடுவில் தொடர்ந்து விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டு  ரிடையர் ஹர்ட் ஆனால் அவருக்குப் பதிலாகவும் களமிறக்கலாம்.

5)பௌலிங் டீம் சார்பாக  இம்பேக்ட் பிளேயர் களமிறங்கினால் அவர் புதிதாக ஒரு ஓவர் போடவே அனுமதிக்கப் படுவார். ஏற்கனவே ஒரு பௌலர் போட்டுக் கொண்டிருக்கும் ஓவரை தொடர அணுமையில்லை.

6)இம்பேக்ட் பிளேயராக களமிறங்கும் வீரர் கேப்டனாக செயல்பட முடியாது.

7)  இம்பேக்ட் பிளேயராக களமிறங்கும் வீரருக்குப் பதிலாகப் போட்டியிலிருந்து வெளியேறும் மற்றோரு வீரர் போட்டியின் இறுதிவரை மறுபடியும் களத்தில் விளையாட அனுமதிக்கப் படமாட்டார்.

8) ஒரு போட்டியின் நடுவே வீரர் ஒருவர் ரிடையர் ஹர்ட் ஆனால் அவருக்குப் பதிலாக அந்த இடத்தில் இம்பேக்ட் பிளேயர் நியமிக்கப்படலாம். பிறகு இம்பேக்ட் பிளேயருக்கு பதிலாக வேறு ஒரு வீரரை வெளிய அனுப்பினால் ரிடையர் ஹர்ட் ஆன வீரர் தனது போட்டியைத் தொடர விரும்பினால் தொடரலாம்.

பி.சி.சி.ஐ யின் இந்த புதிய இம்பேக்ட் பிளேயர் நடைமுறை எந்த அளவில் போட்டியின் சுவாரசியத்தை மாற்றுகிறது என்றும், கிரிக்கெட் ரசிகர்களை எந்த அளவிற்கு கவருகிறது என்பதையும் நடக்கும் ஐ.பி.எல் தொடரில் பொறுத்திருந்து காண்போம்.