IPL 2023 : சாம் கர்ரனுக்கு அடித்தது ஜாக்பாட்.. ஐபிஎல்லில் உச்சபட்ச அடிப்படை விலை.. வாங்கப்போவது யார்?

IPL 2023 : 2022 உலகக் கோப்பையில் இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகனாக தேர்வு பெற்ற சாம் கர்ரன், 2023 ஐபிஎல் ஏலத்திற்கான அதிகபட்ச அடிப்படை விலையான 2 கோடி ரூபாய்க்கு பட்டியலிட்ட 21 வீரர்களில் ஒருவராக உள்ளார்.
இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன், நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் ஒயிட்-பால் கேப்டன் பதவியில் இருந்து விலகிய நிக்கோலஸ் பூரன் போன்ற முக்கிய வீரர்கள் பலர் அதிகபட்ச அடிப்படை விலையான 2 கோடியில் பட்டியலிடப்பட்டுள்ளனர். ஆனால் 2 கோடி அடிப்படை விலை பட்டியலில் ஒரு இந்திய வீரர் கூட பட்டியலிடப்படவில்லை.
ஏலத்தில் அதிகபட்சமாக 87 வீரர்கள் வாங்கப்படலாம் (அணியின் பலம் தலா 25 பேர்) அதில் 30 பேர் வெளிநாட்டுப் பெயர்களாக இருக்கலாம். கொச்சியில் டிசம்பர் 23ஆம் தேதி ஏலம் நடைபெற உள்ளது. கொச்சியில் நடக்கும் ஐபில் மினி ஏலத்தில் மொத்தம் 991 வீரர்கள் (714 இந்தியர்கள் மற்றும் 277 வெளிநாட்டு வீரர்கள்) தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளனர்.
இந்த பட்டியல் ஐபிஎல் நிர்வாகத்தால் அணிகளுக்கு பகிரப்பட்டுள்ள நிலையில், அவர்களிடம் இருந்து கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் ஏலத்தில் பங்கேற்கும் வீரர்களின் எண்ணிக்கை இறுதி செய்யப்படும். அணிகள் தங்கள் பரிந்துரையை சமர்ப்பிக்க டிசம்பர் 9 ஆம் தேதி வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.