கேன் வில்லியம்சன் விலகல்.. இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கு டிம் சவுத்தி கேப்டனாக நியமனம்!!

Representative Image. Representative Image.

By Sekar Published: November 21, 2022 & 15:47 [IST]

Share

நியூசிலாந்தின் நேப்பியரில் நாளை நடைபெறவுள்ள இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, நேற்று நடந்த இரண்டாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு எதிராக 65 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. எனினும் அதில் கேன் வில்லியம்சன் அரைசதம் அடித்திருந்தார். 

இந்நிலையில், நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் வில்லியம்சனுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட மருத்துவ அப்பாயிண்ட்மெண்ட் காரணமாக மூன்றாவது டி20 போட்டியில் அவர் பங்கேற்க மாட்டார் என்பதை உறுதிப்படுத்தியது. மேலும் கேன் வில்லியம்சன் இல்லாத நிலையில், டிம் சவுத்தி அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் ஒருநாள் தொடருக்கு முன்னதாக வில்லியம்சன் மீண்டும் அணியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே நாளை நடக்கும் போட்டியில் கேன் வில்லியம்சனுக்கு பதிலாக மார்க் சாப்மேனை அணியில் இணைத்துள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டியில், இந்தியா 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. இதனால் நாளை இந்திய அணியை வீழ்த்தி தொடரை சமன்செய்ய வேண்டிய நெருக்கடியில் நியூசிலாந்து அணி உள்ளது.

எனினும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இளம் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய தீருவோம் என்ற முனைப்புடன் உள்ளது.