Representative Image.
ஐ.பி.எல் தொடரின் 16-வது சீசன் அடுத்த ஆண்டு நடக்க உள்ளது. அந்த தொடருக்கான மினி ஐ.பி.எல் ஏலம் வரும் டிசம்பர்-23 ஆம் தேதி கொச்சியில் நடைபெற உள்ளது. இந்நிலையில் தொடரில் பங்கேற்க உள்ள அணிகள் தங்கள் அணிக்குத் தேவையான வீரர்களை வாங்கும் வியூகத்தைத் தயார் செய்து வருகின்றனர்.
ஐ.பி.எல் தொடரில் 5-முறை சாம்பியன் பட்டம் வென்று முக்கிய அணியாகத் திகழும் மும்பை இந்தியன்ஸ், கடந்த ஆண்டு நடந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடாமல் தொடரிலிருந்து முன்னதாக வெளியேறியது. இந்த முறை கண்டிப்பாக தங்கள் குறைகளைச் சரி செய்து சிறப்பாக விளையாட வேண்டும் என்ற எண்ணத்தில் மும்பை அணி உள்ளது. இதற்கு முதல் அடியாக கடத்த ஆண்டு அணியிலிருந்த மொத்த வீரர்களில் 13 நபர்களை விடுவித்து 15 நபர்களை மட்டும் தக்கவைத்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னால் பயிற்சியாளர் “அனில் கும்ப்ளே” மும்பை அணி இந்த ஏலத்தில் ஒரு அசத்தல் ஸ்பின்னரை வாங்க வேண்டும் என்று அறிவுரை கூறியுள்ளார். மேலும் ஜிம்பாப்வே வீரர் சிக்கந்தர் ராசா அந்த இடத்திற்கு கச்சிதமாக பொருந்துவர் என்றார். மும்பை அணியில் தற்போது இரு ஸ்பின்னர்கள் குமார் கார்த்திகேயா மற்றும் ஹிருத்திக் ஷோக்கீன் இடம் பெற்றுள்ளார். அவர்கள் இருவரும் சிறந்த ஸ்பின்னர்கள் தான் ஆனால் சிக்கந்தர் ராசா மும்பை அணியில் இடம்பெற்றால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் அணிக்கு மிகவும் உதவுவார் என்று கூறினார்.
அண்மையில் நடந்து முடிந்த டி-20 உலகக்கோப்பை தொடரில் ஜிம்பாப்வே அணிக்காகச் சிறந்த முறையில் பௌலிங் செய்த சிக்கந்தர் ராசா பல போட்டிகளில் வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளார். அதனால் மும்பை அணி தங்களின் மெயின் ஸ்பின்னர் இடத்திற்கு இவரை வாங்கினால் அணிக்கு நல்ல வகையில் உதவுவார் என்று அனில் கும்ப்ளே பதிவு செய்தார்.
மும்பை அணி இந்திய அனுபவ ஸ்பின்னரை வாங்க விரும்பினால் அமித் மிஸ்ரா அல்லது பியூஸ் சவ்லா இவர்களில் ஒருவரை தான் வாங்க வேண்டும். மும்பை அணி அந்த வீரர்களை வாங்க விரும்புவதாக எனக்குத் தெரியவில்லை.
இந்நிலையில் வெளிநாட்டு முன்னனி ஸ்பின்னர் சிக்கந்தர் ராசாவை மும்பை அணிக்கு ஒரு நல்ல பிக் என்று அனில் கும்ப்ளே கூறினார். மேலும் ஏலத்தில் வெளிநாட்டு ஸ்பின்னர்கள் அடில் ரஷித், தப்ரைஸ் ஷம்சி, ஆடம் ஜம்பா ஆகியோரும் ஏலத்தில் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை அணி தங்கள் தரப்பில் இன்னும் 20.55 கோடியை வைத்துள்ள நிலையில் எந்த வீரர்களை தங்கள் அணிக்காக வாங்குவார்கள் என்பதைப் பொறுத்திருந்து காண்போம்.