Representative Image.
இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டியில் இறுதி ஓவர் வரை சுவாரசியம் நிலவியது, இரு அணிகளும் தங்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார்கள்.மேலும் முதல் ஒருநாள் போட்டியில் அதிரடி ஆட்டத்தை கண்டதாக ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு மகிழ்ந்து வருகிறார்கள்
இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது, நியூசிலாந்து அணியின் பவுலிங்கில் இந்திய அணியின் முன்னணி வீரர்கள் திணறிய நிலையில் உடனுக்குடன் விக்கெட்களை இழந்தார்கள்.இந்திய அணியின் இளம் தொடக்க வீரர் சுப்மன் கில் இறுதி வரை விளையாடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இந்த போட்டியில் சுப்மன் கில் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார், மேலும் 149 பந்துகளில் 9 சிக்ஸர்கள் மற்றும் 19 பௌண்டரிகள் உட்பட 208 ரன்களை அடித்து இந்திய அணி தூணாக விளங்கினார்.இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 349 ரன்களை பதிவு செய்தது.
இரண்டாவது இன்னிங்சில் நியூசிலாந்து அணி 350 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கி விளையாடினார்கள், இந்திய அணியின் பவுலர்களை சமாளிக்க முடியாமல் நியூஸிலாந்து அணியின் வீரர்கள் தங்களின் விக்கெட்களை பறிகொடுத்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த மிட்செல் சான்ட்னர் மற்றும் மைக்கேல் பிரேஸ்வெல் அணியின் நிலையை மாற்றினார்கள்.
இந்த போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதி ஓவர் வரை எடுத்து சென்ற மைக்கேல் பிரேஸ்வெல் 140(78) ரன்களை பெற்ற நிலையில் ஷர்துல் தாக்கூர் பந்தில் ஆட்டமிழந்தார். நியூசிலாந்து அணி 49.2 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்த நிலையில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் சிறப்பாக பௌலிங் செய்த முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இந்திய அணி வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கிய இளம் வீரர் சுப்மன் கில் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.இந்த போட்டியில் இறுதி வரை இரு அணிகளும் வெற்றிக்காக போராடியதை பார்க்கும் பொழுது அடுத்து வரும் போட்டிகளுக்கான ஆர்வம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.