இந்திய அணி உலக சாதனை படைக்க வாய்ப்பு..! பார்டர் கவாஸ்கர் தொடரின் முக்கியத்துவம் அதிகரிப்பு..!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இந்த தொடரின் வெற்றியின் மூலம் இந்திய அணி ஒரு உலக சாதனையை படைக்க உள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டை பெருமைப்படுத்தும் வகையில் ஐசிசி 2019 ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை அறிமுகப்படுத்தியது, இந்த தொடரின் முதல் உலக கோப்பையை நியூசிலாந்து அணி கைப்பற்றி அசத்தியது விராட் கோலி தலைமையில் இறுதிப்போட்டி வரை சென்ற இந்திய அணி தோல்வியை தழுவி ஏமாற்றம் அளித்தது.
இந்நிலையில் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் வகையில் வடிவமைக்கப்பட்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் 2வது உலக கோப்பை இறுதிப் போட்டி 2023 ஆம் ஆண்டு ஜூன் (7-11) மாதம் நடைபெற உள்ள நிலையில், இந்த இறுதி போட்டிக்கு செல்லும் இரு அணிகளில் முதல் அணியாக ஆஸ்திரேலியா அணி தேர்வாகியுள்ளது. மேலும் மீதம் உள்ள மற்றொரு இடத்திற்கு செல்ல இந்திய அணி இந்த பார்டர் கவாஸ்கர் தொடரை 3-0 என்ற நிலையில் கைப்பற்றி ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் 126 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணியும், இரண்டாவது இடத்தில் 115 புள்ளிகளுடன் இந்திய அணியும் உள்ளது, எனவே இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் வரும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது மட்டுமல்லாமல் புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு செல்ல வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தொடரில் இந்திய அணி வெற்றி பெற்று முதல் இடத்தை பிடித்தால் மிகப்பெரிய உலக சாதனை ஒன்றை படைக்கும் வாய்ப்பு உறுதி, அதாவது தற்போதைய நிலையில் இந்திய அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ஐசிசியின் ஒருநாள் மற்றும் டி20 அணிகள் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளது.
டெஸ்ட் தரவரிசையில் முதல் இடம் பிடித்தால் ஒரே சமயத்தில் மூன்று வடிவ தொடரில் முதல் இடம் பிடித்த அணி என்ற உலக சாதனையை இந்திய அணி பதிவு செய்யும் என்று தெரிய வந்துள்ளது.
இந்த மாபெரும் சாதனையை இதற்கு முன்னர் 2014 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா அணி தான் படைத்துள்ளது, எனவே இந்த பார்டர் கவாஸ்கர் தொடரை சிறப்பான முறையில் வென்றால் இந்திய அணி ஒரே சமயத்தில் இரண்டு பெருமைகளை அடைய வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.