சூர்யகுமார விடுங்க.. இலங்கைக்கு எதிரான போட்டியில சாஹல் இப்படியொரு சாதனை பண்ணிருக்காரா?

Representative Image. Representative Image.

By Sekar Published: January 08, 2023 & 10:34 [IST]

Share

ராஜ்கோட்டில் நடந்த மூன்றாவது டி20 போட்டியில் இலங்கையை 91 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றதோடு, தொடரையும் 2-1 என கைப்பற்றியுள்ளது. 

இந்த போட்டியில் அபாரமாக விளையாடி ஆட்டமிழக்காமல் 112 ரன்கள் குவித்து இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் ஆட்ட நாயகனாக இருந்தபோதும், பந்து வீச்சாளர்களும் வழக்கமாக ஏமாற்றமளிக்கும் பந்துவீச்சாளர்களும் இந்த முறை அசத்தினர். 

அர்ஷ்தீப் சிங் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை எடுத்த நிலையில், பாண்டியா, உம்ரான், சாஹல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், அக்சர் படேல் ஒரு விக்கெட்டையும் எடுத்தனர். குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய ரெகார்ட் ஒன்றை படைத்துள்ளார்.

சாஹல் vs புவனேஷ்வர்

இந்தியாவின் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவரான புவனேஷ்வர் குமார், இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் 90 விக்கெட்டுளை எடுத்து முதலிடத்தில் இருந்தார். இவருக்கு அடுத்தபடியாக சாஹல் 88 விக்கெட்டுகளுடன் இரண்டாம் இடத்தில் இருந்தார்.

இந்நிலையில், நேற்றைய போட்டியில் சாஹல் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி புவனேஸ்வரின் ரெகார்டை சமன் செய்தார். தற்போது புவனேஷ்வர் மற்றும் சாஹல் இருவரும் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர்.

இந்தியாவுக்காக அதிக டி20 விக்கெட்டுகள்

புவனேஷ்வர் குமார் – 90

யுஸ்வேந்திர சாஹல் – 90

ரவிச்சந்திரன் அஸ்வின் – 72

ஜஸ்பிரித் பும்ரா – 70

ஹர்திக் பாண்டியா – 64

90 விக்கெட்டுகளை எட்டுவதற்கு புவனேஷ்வரை விட சாஹலுக்கு 13 போட்டிகள் குறைவாகவே தேவைப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சாஹல் விக்கெட் எண்ணிக்கையை எட்டுவதற்கு 74 போட்டிகள் தேவைப்பட்டன, புவனேஷ்வர் 90 விக்கெட்டுகளை எட்டுவதற்கு 87 போட்டிகள் தேவைப்பட்டன.

இந்நிலையில், டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 100 விக்கெட்டுகளை முதலில் எட்டப்போவது யார் என்ற விவாதம் ரசிகர்களிடையே உருவாகியுள்ளது.