சாதனை மழையில் சூர்யகுமார் யாதவ்..! இனி நம்பர்-1 இவர் தான்..!

இந்திய அணியின் மிஸ்டர்.360 என்று அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவ் இந்தியா மற்றும் இலங்கை அணிக்கு எதிரான 3-வது டி 20 போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்து அசத்தினார். மேலும் பல புதிய சாதனைகளை படைத்து கிரிக்கெட் உலகையே மிரள வைத்தார்.
இந்திய அணியின் முன்னணி டி20 பேட்ஸ்மேனாக திகழும் சூர்யகுமார் யாதவ், இலங்கைக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் 51 பந்துகளில் 9-சிக்ஸர்கள் 7-பவுண்டரிகள் 112 ரன்களை அடித்து சர்வதேச அரங்கில் டி20 போட்டியில் தனது 3-வது சதத்தை பதிவு செய்தார்.
இந்த போட்டியில் 45 பந்துகளில் சூர்யா குமார் யாதவ் சதம் அடித்தார். இது இந்திய வீரர் அடித்த 2-வது அதிவேக சதமாக பதிவானது. மேலும் இந்த பட்டியலில் முதல் இடத்தில் இந்திய அணியின் ரோஹித் சர்மா இதே இலங்கை அணிக்கு எதிராக 2017-ஆம் ஆண்டு 35 பந்துகளில் அடித்த சதம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்ததாக டி20 போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 4-சதங்களுடன் ரோஹித் சர்மா முதல் இடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து 3-சதங்களுடன் சூர்யகுமார் யாதவ், ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல் ,நியூஸிலாந்தின் கொலின் மன்றோ மற்றும் செக் குடியரசை சேர்ந்த சபாவூன் டேவிசி இரண்டாவது இடத்தில் உள்ளார்கள்.
சூர்யகுமார் டி20 தொடரில் 45 இன்னிங்சில் 1,500 ரன்களுக்கு மேல் அடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். இதில் 3 சதங்கள், 13 அரை சதங்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியின் மிரட்டல் பேட்ஸ்மேனாக விளங்கும் சூர்யா குமார் யாதவ், கடந்த ஆண்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் ஐசிசி டி20 தரவரிசையில் முதல் இடத்தை பெற்றார். இந்த ஆண்டும் தொடர்ந்து தனது பேட்டிங்கில் அசத்துவதால் டி20 தொடரின் அசைக்க முடியாத பேட்ஸ்மேனாக வலம் வருவார் என்று கிரிக்கெட் நிபுணர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.