Representative Image.
IND vs NZ 2nd T20 : இந்தியா-நியூசிலாந்து இடையேயான இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா நியூசிலாந்து அணியை 65 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.
டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்த பிறகு ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் அணி நியூசிலாந்து தொடருக்கு களமிறங்கியது.
கடந்த வியாழக்கிழமை முதல் போட்டி திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அது மழையால் ரத்தானது. இந்நிலையில், இன்று இரண்டாவது போட்டி திட்டமிட்டபப்டி நடந்தது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
இதையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரிஷப் பண்ட் வெறும் 6 ரன்களில் அவுட்டானாலும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷான் ஒன் டவுனாக களமிறங்கிய சூர்யகுமார் யாதவுடன் சேர்ந்து அதிரடியாக ரன் குவித்தனர்.
இஷான் கிஷான் 36 ரன்களில் அவுட்டானாலும், சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடி சதமடித்து கடைசி வரை அவுட்டாகாமல் 111 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவரில் ஹர்திக் பாண்டியா, தீபக் ஹூடா மற்றும் வாஷிங்டன் சுந்தர் அடுத்தடுத்து ஹாட்ரிக் அவுட்டானாலும், இறுதியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய நிலையில், முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே பின் ஆலனை புவனேஷ்வர் குமார் டக்கவுட்டாக்கி வெளியேற்றினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் டேவன் கான்வே 25 ரன்களில் வெளியேற, கேப்டன் கேன் வில்லியம்சன் பொறுப்புடன் ஆடி 6 ரன்கள் எடுத்தார்.
எனினும் மற்ற வீரர்கள் யாரும் இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் அவுட்டாக, நியூசிலாந்து அணி இறுதியில் 18.5 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 126 ரன்கள் மட்டுமே எடுத்தது. அபாரமாக பந்துவீசிய தீபக் ஹூடா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதன் மூலம் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.