IND vs NZ 2nd ODI Highlights : முடிந்தது போட்டி.. வென்றது மழை!!
IND vs NZ 2nd ODI Highlights : இந்தியா நியூசிலாந்து இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
நியூசிலாந்தில் இந்திய கிரிக்கெட் அணி தற்போது மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஷிகர் தவான் தலைமையில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்தியா தோல்வியடைந்த நிலையில், இன்று இரண்டாவது போட்டி நடந்தது.
இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்ததை அடுத்து, இந்திய அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனுமான ஷிகர் தவான் வெறும் 3 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டான நிலையில், மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மன் கில்லும், ஒன் டவுனாக களமிறங்கிய சூர்யகுமார் யாதவும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர்.
முன்னதாக மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டு தலா 29 ஓவர்களாக குறைக்கப்பட்ட நிலையில், மீண்டும் மழை பிடித்ததால், 12.5 ஓவர்களில் இந்தியா 89/1 என்ற நிலையில் இருந்தபோது ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அப்போது கில் 45 ரன்களுடனும், சூர்யகுமார் 34 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதனால் தற்போது நியூசிலாந்து 1-0 என முன்னிலை பெற்றுள்ள நிலையில், அடுத்த போட்டியில் வென்று தொடரை சமன் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.
இதற்கிடையே, தொடர்ந்து சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும், ரிஷப் பண்ட் இந்த போட்டியில் இடம் பெற்றிருந்த நிலையில், நீண்ட காலத்திற்கு பிறகு முதல் ஒருநாள் போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டு, லோயர் ஆர்டரில் களமிறங்கி சிறப்பாக செயல்பட்ட சஞ்சு சாம்சன் இந்த போட்டியில் மீண்டும் பெஞ்சில் அமரவைக்கப்பட்டது ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.