மீண்டும் தோல்வி.. வங்கதேசத்திடம் ஒருநாள் தொடரை இழந்தது இந்தியா!!

Representative Image. Representative Image.

By Sekar Published: December 08, 2022 & 12:41 [IST]

Share

இந்திய கிரிக்கெட் அணி ரோஹித் சர்மா தலைமையில் வங்கதேச அணிக்கு எதிராக  மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

வங்கதேசத்தில் உள்ள டாக்காவில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் சரியாக விளையாடாத இந்திய அணி இறுதிவரை போராடி தோல்வியைத் தழுவியது. இதனால் மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1-0 என்ற நிலையில் வங்கதேச அணி முன்னிலையில் இருந்தது. 

இரண்டாவது ஒருநாள் போட்டியில் கட்டாய வெற்றியை நோக்கி இந்திய அணி களமிறங்கியது,வங்கதேச அணியும் இந்த போட்டியில் வெற்றிபெற்றால்  தொடரை கைப்பற்றலாம் என்ற  நோக்கிலிருந்தது. இத்தனை எதிர்பார்ப்புகளுக்கு இடையே இரண்டாவது ஒருநாள் போட்டி டாக்காவில் உள்ள  ஷேர் பங்களா தேசிய மைதானத்தில் தொடங்கியது.

டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் லிட்டன் தாஸ் முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். முதலில் களமிறங்கிய வங்கதேச அணி வீரர்கள் இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் சொற்ப ரன்களிலேயே தங்கள் விக்கெட்டுகளை பறி கொடுத்தனர். போட்டி தொடங்கிய சில ஓவர்களிலேயே இந்திய கேப்டன் ரோஹித் காயம் ஏற்பட்டு வெளியேறியதால், கேப்டன் பொறுப்பை கே.எல்.ராகுல் ஏற்றார்.

வங்கதேச அணியின் முன்னணி வீரர்கள் அனாமுல் ஹக், லிட்டன் தாஸ், சாண்டோ, ஷகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹீம் ஆகியோர் மொத்தமாக 52 ரன்களை மட்டுமே அடித்தனர். பிறகு ஜோடி சேர்ந்த மஹ்முதுல்லாஹ் மற்றும் மெஹிதி ஹசன் மிராஸ் நிதானமாக விளையாடி தங்கள் அணியின் ஸ்கோரை அதிகப்படுத்தினர்.

குறிப்பாக வங்கதேச அணியின் ஆல்-ரவுண்டர் மெஹிதி ஹசன் மிராஸ் 100*(83) ரன்களை அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்கு துணையாக நின்ற மஹ்முதுல்லாஹ் 77(96)அடித்தார். இதனால் வங்கதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 271 ரன்களை அடித்தனர். இந்திய அணியின் சார்பில் பௌலர்கள் வாஷிங்டன் சுந்தர் 3-விக்கெட்டுகளையும் ,உம்ரன் மாலிக் மற்றும் சிராஜ் தலா 2-விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்கள்.

இரண்டாவது இன்னிங்ஸில் 272 ரன்களை அடித்தால் வெற்றி என்ற இலக்குடன்  இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ஷிகர் தவான் மற்றும் விராட் கோலி களமிறங்கினார்கள். இந்திய அணியின் கேப்டன் மற்றும் தொடக்க வீரர் ரோஹித் சர்மாவிற்கு போட்டியின்போது கையில் ஏற்பட்ட காயத்தினால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதால், இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஷிகர் தவான் மற்றும் விராட் கோலி களமிறங்கினர். 

ஆனால் இருவரும் மிக விரைவாக ஆட்டமிழக்க, அடுத்து வந்த வீரர்களும் வங்கதேச அணியின் பந்துவீச்சில் தங்கள் விக்கெட்டுகளை இழந்தனர். இந்திய அணியின் தனி ஒருவனாக நின்று சிறப்பாக பேட்டிங் செய்த ஷ்ரேயஸ் ஐயர் 82(102) எடுத்து ஆட்டமிழந்தார். அவருக்கு துணையாக விளையாடிய அக்சர் படேல் 56(56) ரன்களை அடித்து தனது விக்கெட்டை இழந்தார்.

இறுதியாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா காயத்துடன் களமிறங்கி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 51*(28) ரன்களை அடித்து இறுதிவரை களத்தில் இருந்தார். அவர் தனது காயத்தையும் பொருட்படுத்தாமல் இறுதிவரை போராடியும் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியிடம் தோல்வியைத் தழுவியது. மேலும் 2-0 என்ற வகையில் ஒருநாள் தொடரையும் இழந்தது.

இந்திய அணியின் இந்த மோசமான ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் கவலையை அடைய வைத்துள்ளது. அடுத்த வருடம் ஒருநாள் உலகக்கோப்பை இந்திய மண்ணில் நடக்கவுள்ளது. இதனை இந்திய அணி கண்டிப்பாகக் கைப்பற்ற வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்த தோல்விகளை மறந்து தனது பழைய நிலைக்கு இந்திய அணி திரும்பும் என்று பல ரசிகர்கள் நம்பிக்கையுடன் இணையதளத்தில் பதிவிட்டும் வருகின்றனர்.