3 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி.. தொடரையும் கைப்பற்றி அசத்தல்!!

இந்தியா-வங்கதேசம் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு, தொடரையும் 2-0 என கைப்பற்றியுள்ளது.
முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 188 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்ற நிலையில், கடந்த 22 ஆம் தேதி இரண்டாவது டெஸ்ட் போட்டி மிர்பூரில் நடந்தது. இதில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
முதல் இன்னிங்ஸ்
முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணியினர் இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். முதல் நாளே 227 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியின் மொமினுல் ஹாக் மட்டும் அதிகபட்சமாக 84 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் சிறப்பாக பந்துவீசிய உமேஷ் யாதவ் மற்றும் அஸ்வின் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணியில் ரிஷப் பண்ட் மற்றும் ஷ்ரேயஸ் அய்யரின் சிறப்பான ஆட்டத்தால் 314 ரன்கள் எடுத்தது. இருவரும் முறையே 93 மற்றும் 87 ரன்கள் எடுத்ததனர். இதன் மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 87 ரன்கள் முன்னிலையில் இருந்தது.
இரண்டாவது இன்னிங்ஸ்
87 ரன்கள் பின்தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேச அணி 231 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. சாகிர் ஹசன் 51 ரன்களும், லிட்டன் தாஸ் 73 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியின் அக்சர் படேல் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து 145 ரன்கள் எனும் எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி அதிர்ச்சியளிக்கும் வகையில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. டாப் ஆர்டர் பேட்டிங் மொத்தமாக சரிந்த நிலையில், அக்சர் படேல், அஸ்வின் மற்றும் ஷ்ரேயஸ் அய்யரின் பொறுப்பான ஆட்டத்தால், இறுதியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் தொடரையும் 2-0 என கைப்பற்றி கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணி அசத்தியுள்ளது.