ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு.. முதல் போட்டியே பரம எதிரியோடு தான்!!

தென்னாப்பிரிக்காவில் ஜனவரியில் தொடங்கும் முத்தரப்பு தொடர் மற்றும் மற்றும் வரவிருக்கும் ஐசிசி மகளிர் டி 20 உலகக் கோப்பை 2023க்கான இந்திய அணியை அகில இந்திய பெண்கள் தேர்வுக் குழு நேற்று தேர்ந்தெடுத்தது.
இந்த தொடர்களில் ஹர்மன்ப்ரீத் கவுர் இந்திய அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் ஸ்மிரிதி மந்தனா துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
"ஐசிசி மகளிர் டி 20 உலகக் கோப்பை 2023 பிப்ரவரி 10, 2023 இல் தொடங்க உள்ளது, டீம் இந்தியா பிப்ரவரி 12 ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக கேப்டவுனில் தனது முதல் போட்டியில் விளையாட உள்ளது. இந்திய அணி இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள், பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்துடன் குரூப் 2 இல் உள்ளது. . குழு நிலை முடிவில் ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதியில் விளையாடும். இறுதிப் போட்டி பிப்ரவரி 26, 2023 அன்று நடைபெறும்" என்று பிசிசிஐ ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில், மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஷிகா பாண்டே மீண்டும் அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
33 வயதான ஷிகா பாண்டே கடைசியாக அக்டோபர் 2021 இல் இந்தியாவுக்காக விளையாடினார். அவரது சேர்க்கை, வேகப்பந்து வீச்சில் பலவீனமாக இருக்கும் இந்திய அணிக்கு கூடுதல் பலத்தை கொடுக்கும் எனக் கூறப்படுகிறது. ஷிகா பாண்டே இந்திய அணிக்காக மூன்று டெஸ்ட், 55 ஒருநாள் மற்றும் 56 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
கடைசியாக உள்நாட்டில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவிடம் 1-4 என்ற கணக்கில் தொடரை இழந்த இந்திய அணியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெமிமா ரோட்ரிக்ஸும் அணியில் தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.
இடது கை வேகப்பந்து வீச்சாளர் அஞ்சலி சர்வானியும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தனது முதல் தொடரைத் தொடர்ந்து அணியில் இடம்பெற்றுள்ளார். மற்ற வேகப்பந்து வீச்சு தேர்வாக ரேணுகா தாக்கூர் மற்றும் பூஜா வஸ்த்ரகர் ஆகியோர் உள்ளனர். அவர்கள் அணியில் சேர்க்கப்படுவது உடற்தகுதிக்கு உட்பட்டது.
ஆஸ்திரேலிய தொடர் பந்துவீச்சில் இந்தியாவின் பலவீனங்களை அம்பலப்படுத்தியது மற்றும் ஐசிசி டி20 உலகக்கோப்பைக்கு முன் இதை சரிசெய்ய வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. அணியில் உள்ள சுழற்பந்து வீச்சாளர்களில் ஆல்-ரவுண்டர்கள் தீப்தி சர்மா மற்றும் தேவிகா வைத்யா மற்றும் ராதா யாதவ் மற்றும் ராஜேஸ்வரி கயக்வாட் ஆகியோர் அடங்குவர்.
ஷஃபாலி வர்மா மற்றும் ரிச்சா கோஷ் ஏற்கனவே U-19 அணியுடன் தென்னாப்பிரிக்காவில் உள்ளனர். டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக, 2023 ஜனவரி 19 முதல் தொடங்கும் முத்தரப்பு தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது.
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை 2023க்கான இந்திய அணி: ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஷபாலி வர்மா, யாஸ்திகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்லீன் தியோல், தீப்தி ஷர்மா, ராதா யாதவ், ரேணுகா தாக்கூர், அஞ்சலி சர்வானி, பூஜா வஸ்த்ரகர், ராஜேஸ்வரி கயக்வாட், ஷிகா பாண்டே
ஸ்டாண்ட் பை : சபினேனி மேகனா, சினே ராணா, மேக்னா சிங்.
முத்தரப்பு தொடருக்கான இந்திய அணி: ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), யாஸ்திகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்லீன் தியோல், தீப்தி சர்மா, தேவிகா வைத்யா, ராஜேஸ்வரி கயக்வாட், ராதா யாதவ், ரேணுகா சிங், மேகனா சிங், அஞ்சலி சர்வானி, சுஷ்மா வர்மா (விக்கெட் கீப்பர்), அமன்ஜோத் கவுர், பூஜா வஸ்த்ரகர், சபினேனி மேகனா, சினே ராணா, ஷிகா பாண்டே