ICC T20 World Cup 2022 : பங்காளி எப்படியாச்சும் ஜெயிச்சுடுங்கப்பா.. இந்தியாவின் வெற்றியை எதிர்பார்த்து காத்திருக்கும் பாகிஸ்தான்!!

ICC T20 World Cup 2022 : ஐசிசி டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பாகிஸ்தானின் அரையிறுதி கனவு தற்போது இந்தியாவின் கையில் உள்ளது.
ஐசிசி உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றில் மொத்தம் 12 அணிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே குழுவில் இடம் பெற்றுள்ளது.
சூப்பர் 12 சுற்றில் இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் த்ரில் வெற்றி பெற்ற நிலையில், அடுத்து நெதர்லாந்தை துவம்சம் செய்து, புள்ளிப்பட்டியலில் வலுவாக முதலிடத்தில் உள்ளது. இதனால் இந்தியாவின் அரையிறுதி கனவு கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
ஆனால் 2021 உலகக்கோப்பையில், முதல் சுற்றில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதி வரை சென்ற பாகிஸ்தானுக்கு 2022 உலகக்கோப்பை சோகமயமாக மாறி உள்ளது. முதல் போட்டியில் இந்தியாவிடம் கடைசி பந்து வரை போராடி தோற்றது.
மேலும், இரண்டாவது போட்டியில் ஜிம்பாப்வேவை எளிதாக வீழ்த்தி விடலாம் என பாகிஸ்தான் தப்புக் கணக்கு போட, 131 ரன்கள் எனும் எளிய இலக்கை சேஸ் செய்ய முடியாமல், கடைசி பந்து வரை போராடி ஒரு ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேவிடம் தோல்வியைத் தழுவியது.
இந்தியா தனது அரையிறுதி வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்ட நிலையில், நாளைய போட்டியில் தென்னாப்பிரிக்கா இந்தியாவை வீழ்த்தி விட்டால், ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாமல் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் இருக்கும் பாகிஸ்தானின் அரையிறுதி கனவு நிராசையாகி விடும்.
இதனால் நாளைய போட்டியில், இந்தியா வென்றால் தான், பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்பு தக்கவைக்கப்படும் என்பதால், எப்போதும் இந்தியாவின் தோல்வியையே விரும்பும் பாகிஸ்தானும், பாகிஸ்தான் ரசிகர்களும் தற்போது இந்தியா வெற்றி பெற வேண்டும் என பிரார்த்தித்து வருகின்றனர்.