ICC T20 World Cup 2022 BAN vs ZIM : டாப் ஆர்டர் சரிந்தாலும், கடைசி வரை மல்லுக்கட்டிய ஜிம்பாப்வே.. போராடி வென்ற வங்கதேசம்!!
ICC T20 World Cup 2022 BAN vs ZIM : ஐசிசி டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றில் இன்று நடந்த முதல் போட்டியில் வங்கதேசம் ஜிம்பாப்வே அணியை 3 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. வங்கதேசத்தின் தொடக்க ஆட்டக்காரர் சௌம்யா சர்க்கார் டக்கவுடாகி ஆரம்பத்திலேயே அதிர்ச்சி கொடுத்தாலும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான நஜ்முல் ஹுசைன் சாண்டோ நிலைத்து நின்று ஆடி 55 பந்துகளில் 7 பவுண்டரிகள், 1 சிக்ஸர் உட்பட 71 ரன்கள் எடுத்தார்.
அடுத்தடுத்து பேட்டிங் செய்ய வந்தவர்களும் டீசண்டான ரன் சேர்த்த நிலையில், வங்கதேசம் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 151 ரன்கள் எனும் இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.
தொடக்க ஆட்டக்காரர்கள் வெஸ்லே மதவேரே 4 ரன்களிலும், கிரேக் இர்வின் 8 ரன்களிலும் அவுட்டாகி வெளியேறினர். அடுத்து வந்த மில்டன் சும்பாவும் 8 ரன்களில் வெளியேற, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக செயல்பட்ட சிக்கந்தர் ராசா டக்கவுட்டாகி வெளியேறினார்.
ஒரு கட்டத்தில் பவர்பிளே முடிவதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து ஜிம்பாப்வே அணி கடும் நெருக்கடியை எதிர்கொள்ள ஆரம்பித்தது. இனி ஜிம்பாப்வே அவ்ளோ தான் தேறாது என அனைவரும் நினைக்கையில் சியான் வில்லியம்ஸ் ஜிம்பாப்வேவின் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலிக்க ஆரம்பித்தார்.
அவர் ஒரு பக்கம் நிலைத்து நின்றாலும், அடுத்து வந்த ரெஜிஸ் சகப்வா தாக்குப்பிடிக்க முடியாமல் 15 ரன்களில் நடையைக் கட்டினார். 11.2 ஓவரில் ரெஜிஸ் அவுட்டானபோது ஜிம்பாப்வே ஸ்கோர் 69/5 என இருந்தது. எனினும் அடுத்து வந்த ரியான் பர்ல் சியான் வில்லியம்ஸுடன் கூட்டணி அமைத்தார்.
இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் வங்கதேச அணியினர் தடுமாற, சியான்-ரியான் ஜோடி மெதுமெதுவாக அணியின் ஸ்கோரை மீட்டு, ஜிம்பாப்வேயை வெற்றிப் பாதைக்கு நகர்த்தினர். ஒரு கட்டத்தில் கடைசி 6 பந்தில் 16 ரன்கள் தேவை எனும் பரபரப்பான கட்டத்திற்கு போட்டி சென்றது.
இந்த பரபரப்பான சூழலில் 2வது பந்தில் பிராட் இவன்ஸ் அவுட்டாக நிலைமை மோசமானது. ஆனால் அடுத்து வந்த ரிச்சர்ட் ந்கர்வா வங்கதேசத்திற்கு அதிர்ச்சி கொடுத்து ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் என அடுத்தடுத்து அதிரடித்தார். இதனால் கடைசி 2 பந்துகளில் 5 ரன்கள் தேவை என சூழல் அடியோடு மாற, ரிச்சர்ட் 5வது பந்தில் அவுட்டானார்.
கடைசி பந்து நோ பாலாக மாற, வெற்றிக்கு 4 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் கடைசி பந்தில் ஒரு ரன் கூட எடுக்க முடியாததால் வங்கதேசம் 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.