HBD Jadeja : ஜடேஜாவின் மறக்க முடியாத மூன்று முக்கிய தருணங்கள்!!
HBD Jadeja : இந்தியாவின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா பற்றி புதிதாக அறிமுகம் எதுவும் தேவையில்லை. அவர் போட்டிகளில் ஆற்றல்மிக்க ஹிட்டர், விக்கெட் எடுக்கும் பந்துவீச்சாளர் மற்றும் ஒரு அற்புதமான பீல்டர் எனும் பல பெருமைகளை கொண்டுள்ளார். ஷேன் வார்ன் அவரை ராக்ஸ்டார் என்று அழைத்ததில் ஆச்சரியமில்லை, அவருடைய விதிவிலக்கான திறமைகளை அடிக்கோடிட்டுக் காட்டினார்.
இன்று 34 வயதாகும் ஜடேஜா, குஜராத்தின் ஜாம்நகரில் டிசம்பர் 6, 1988 இல் பிறந்தார். கிரிக்கெட்டில் மிகச் சிறப்பாக செயல்பட்டு, 2009 ஆம் ஆண்டு மலேசியாவில் நடந்த U-19 உலகக் கோப்பையை இந்தியா வென்றபோது விராட் கோலி கேப்டனாக இருந்த அணியில், இவர் துணை கேப்டனாக இருந்தார்.
பிப்ரவரி 8, 2009 அன்று, இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 77 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 60 ரன்கள் எடுத்தார்.
அவரது பிறந்தநாளான இன்று அவரது மூன்று சிறந்த தருணங்களை பார்ப்போம்.
1. இந்தியா vs இங்கிலாந்து, (2013 சாம்பியன்ஸ் டிராபி 2013 இறுதிப் போட்டி) : இந்த போட்டியில் ஜடேஜா 7வது இடத்தில் பேட் செய்தார். இந்த போட்டியில் தோனி, ரெய்னா உட்பட இந்திய அணியின் பெரும்பாலான சொதப்ப, ஒருகட்டத்தில் 13 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 66 ரன்கள் என இந்திய அணி தத்தளித்த போது ஜடேஜா களமிறங்கினார்.
அவர் விராட் கோலியுடன் சேர்ந்து அணியின் ஸ்கோர் 129 ஆக உயர கடுமையாக பாடுபட்டார். ஜடேஜா 25 பந்துகளில் 33* ரன்கள் எடுத்தார். இந்த போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக ஜடேஜா இரண்டு முக்கிய விக்கெட்டுகளையும் கைப்பற்றினார் மற்றும் களத்தில் சிறப்பாக செயல்பட்டார். இறுதியில் அவரது ஆல்ரவுண்ட் செயல்பாட்டிற்காக மேன் ஆஃப் தி மேட்ச் விருதை வென்றார்.
2. இந்தியா vs இங்கிலாந்து (2014, லார்ட்ஸ் டெஸ்ட்): ஒரு டெஸ்ட் ஆல்ரவுண்டராக ஜடேஜாவின் திருப்புமுனை 2014 இல் இங்கிலாந்துக்கு எதிராக வந்தது. அவர் தனது முதல் டெஸ்ட் அரைசதம் அடித்தார். இரண்டாவது இன்னிங்சில் அவரது 68 ரன் இந்தியாவின் பக்கம் போட்டியை சாய்த்தது. கூடவே இஷாந்த் ஷர்மாவின் அபார பந்துவீச்சில், இந்தியா லார்ட்ஸில் சிறப்பான வெற்றியைப் பெற்றது.
3. இந்தியா vs நியூசிலாந்து, (2019, ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை அரையிறுதி) : 2019 உலகக் கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக ஜடேஜாவின் மிகச் சிறப்பாக செயல்பட்டும், இந்தியா தோல்வியடைந்தது. ஜடேஜா அணியில் சிறந்த பந்துவீச்சு எகானமியையும் கொண்டிருந்தார். அதே போல் ராஸ் டெய்லரின் முக்கியமான ரன் அவுட்டையும் செய்தார்.
முதலில் பேட் செய்த நியூசிலாந்து 240 ரன்களை இலக்காக நிர்ணயித்த நிலையில், இந்தியாவின் டாப் ஆர்டர் மற்றும் மிடில் ஆர்டர் மொத்தமாக சரிந்ததில், ஒரு கட்டத்தில் 92/6 என்ற நிலையில் இந்தியா பெரிய சிக்கலில் இருந்தது. அப்போது ஜடேஜா களமிறங்கி நியூசிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு எதிராக எதிர் தாக்குதலை தொடங்கினார்.
தோனியுடன் கூட்டணி அமைத்து வேகமாக 59 பந்துகளில் 77 ரன்கள் எடுத்தார். தோனியும் அரை சதம் அடித்தார். இருப்பினும், இந்தியா 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
டெஸ்ட் போட்டிகளில், அவர் 1,000 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார் மற்றும் 100 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்துள்ளார். மேலும், ஒரே இன்னிங்சில் சதம் அடித்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த ஆண்டு பஞ்சாபில் நடந்த இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், ஜடேஜா 175 ரன்களுடன் (நாட் அவுட்) 9 விக்கெட்டுகளை கைப்பற்றி அவ்வாறு செய்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.