Representative Image.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) வட்டாரங்களின்படி, ஜனவரி 3 ஆம் தேதி முதல் மும்பையில் தொடங்க உள்ள இலங்கைக்கு எதிரான வரவிருக்கும் டி20தொடரில் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இந்திய அணியை கேப்டனாக வழிநடத்துவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தொடரின் இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகள் புனே (ஜனவரி 5) மற்றும் ராஜ்கோட் (ஜனவரி 7) ஆகிய இடங்களில் நடைபெறும்.
ரோஹித் ஷர்மாவின் கட்டை விரலில் ஏற்பட்ட காயம் குணமடைய இன்னும் சிறிது காலம் ஆகலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும், டி20 கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் சர்மா விலகுவாரா அல்லது தற்போதைக்கு இந்த விவகாரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை.
ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக் கோப்பை 2022 அரையிறுதியில் இந்தியா வெளியேறியதில் இருந்து, புதிய தேர்வுக் குழு பொறுப்பேற்றவுடன் மாற்றம் நடக்கும் என்பது தெளிவாகத் தெரிந்தாலும், இதுவரை முறையான அறிவிப்பு எதுவும் வரவில்லை. ஊகங்கள் இருந்தபோதிலும், அபெக்ஸ் கவுன்சில் கூட்டத்தில் இந்தியாவின் டி 20 கேப்டன்சி குறித்து எந்த விவாதமும் இல்லை என்று கூறப்படுகிறது.
இருப்பினும், இந்தியாவின் டி 20 கட்டமைப்பை முழுவதுமாக மறுசீரமைக்க, குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக தனது தலைமைப் பொறுப்பில் புத்திசாலித்தனத்தைக் காட்டிய ஆல்-ரவுண்டர் ஹர்திக் ஒரு சிறந்த மாற்றாகக் கருதப்படுகிறார்.
50 ஓவர் உலகக் கோப்பையின் காரணமாக அடுத்த வருடத்தில் ஆறு டி20 போட்டிகள் மட்டுமே உள்ளன. மேலும் 2024 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கான திட்டத்தில் ரோஹித் இல்லாததால், அவர் தனது டி20 கேரியர் குறித்து முடிவு செய்யும் வரை டி20ஐத் தவிர்க்க வேண்டியது அவசியம் என பிசிசிஐ எண்ணுகிறது.
மேலும் ரோஹித் சர்மாவுக்கு தற்போது 35 வயது ஆகிவிட்டதால், 2023 ஒருநாள் உலகக்கோப்பை முடிந்த பிறகு அவர் எப்போது வேண்டுமானாலும் ஓய்வை அறிவிக்கலாம் என்ற சூழல் நிலவுகிறது. இதனால் ஒருநாள் போட்டிகளுக்கும் ஹர்திக் பாண்டியாவையே கேப்டனாக நியமிக்கலாமா என்ற ஆலோசனையும் பிசிசிஐ வட்டாரங்களில் நடப்பதாக பேசப்படுகிறது.
நேற்று அபெக்ஸ் குழு கூட்டம் முடிந்த நிலையில், அடுத்தடுத்த நாட்களில் அதிரடியான அறிவிப்புகளை பிசிசிஐ இடம் இருந்து எதிர்பார்க்கலாம் என்பதால் கிரிக்கெட் வட்டாரம் பரபரத்துக் கிடக்கிறது.