அசத்தலான பேட்டிங்கால் குஜராத் அபார வெற்றி.. சொந்த மண்ணில் சொதப்பிய கொல்கத்தா.. | GT vs KKR IPL 2023 Match Highlights

ஐபிஎல் 2023 தொடரின் 39 வது லீக் போட்டியில் நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை, ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, கொல்கத்தா அணி சார்பில் ஜெகதீசன், ரஹ்மானுல்லா குர்பாஸ் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்த ஜெகதீசன் 19(15) பவுலர் முஹம்மது ஷமி இடம் தனது விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினார்.
அதன்பின் மற்றொரு தொடக்க வீரரான ரஹ்மானுல்லா குர்பாஸ் தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை ஒரு புறம் வெளிப்படுத்த, அதே சமயத்தில் கொல்கத்தா அணியின் மற்றொரு வீரர் ஷர்துல் தாக்கூர் 0(4) உடைய விக்கெட்டை முஹம்மது ஷமி கைப்பற்றினார். கொல்கத்தா அணி 2 விக்கெட்டுகளை இழந்தாலும் குர்பாஸ் அதிரடியில் 6 ஓவர் (பவர் பிளே) முடிவில் கொல்கத்தா அணி 61 ரன்கள் பதிவு செய்தது.
கொல்கத்தா அணி சார்பில் சிறப்பாக விளையாடி வந்த இளம் வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் 27 பந்துகளில் அரைசதம் பதிவு செய்து அசத்தினார். அதன்பின் குஜராத் டைட்டன்ஸ் அணி சார்பில் சிறப்பாக பவுலிங் செய்த இடது கை வேகப்பந்து பவுலர் ஜோசுவா லிட்டில் ஒரே ஓவரில் கொல்கத்தா அணியின் முன்னணி வீரர்கள் வெங்கடேஷ் ஐயர் 11(14) மற்றும் நிதிஷ் ராணா 4(3) உடைய விக்கெட்டுகளை கைப்பற்றி அணிக்கு உதவினார்.
பின்னர், அணிக்கு ரன்களை குவித்த ரஹ்மானுல்லா குர்பாஸ் 81(31) ரன்களில் நூர் அகமது பந்தில் ஆட்டமிழந்தார். இறுதியில், கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் குஜராத் அணிக்கு 180 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதன்பின், 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு குஜராத் அணி வீரர்கள் களத்தில் இறங்கினர். சுப்மன் கில்லின் அதிரடி ஆட்டத்தால் குஜராத் அணி 3 ஓவர்கள் முடிவில் 32 ரன்களை சேர்த்தது. பின்னர், ரஸல் பந்துவீச்சில் சாஹா 10 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினார்.
அதன்பிறகு அணியின் கேப்டன் பாண்ட்யா 26 ரன்களில் விக்கெட்டை பறிகொடுக்க, சிறப்பாக ஆடிய கில் 49 ரன்னில் நரைன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து, விஜய் சங்கர் மற்றும் டேவிட் மில்லர் இணை குஜராத்தை வெற்றியின் பாதைக்கு அழைத்துச் சென்றது. இறுதியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி பெற்றது.