ஐபிஎல் 2023 : ஐபிஎல் தொடரில் இருந்து விலக வாய்ப்புள்ள வெளிநாட்டு வீரர்கள்..!!

இந்தியாவின் உள்நாட்டு தொடர்களில் முக்கிய தொடராக விளங்கும் ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் வரும் மார்ச் 31 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்கள், ஆனால் ஐபிஎல் அணிகளுக்கு பின்னடைவை தரும் வகையில் தொடர் பாதியில் அல்லது முழுமையாக விலக வாய்ப்புள்ள முக்கிய வெளிநாட்டு வீரர்கள் பற்றி காண்போம்.
ஐபிஎல் தொடருக்கான தனி ரசிகர்கள் கூட்டம் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக அளவில் உள்ளார்கள், இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் மார்ச் 31ஆம் தேதி தொடங்கி மே 28 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் இந்திய வீரர்களுக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் போல் வெளிநாட்டு வீரர்களுக்கு ரசிகர்கள் கூட்டம் உண்டு, குறிப்பாக அவர்களின் ஆட்டத்தை காண்பதற்காகவே ஐபிஎல் தொடரை காணும் கூட்டம் என்று கூறினால் மிகையில்லை.
ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு எடுக்கப்பட்ட முன்னணி வெளிநாட்டு வீரர்கள் பலர், இந்த 2023 தொடர் பாதியில் இருந்து விலகி விட வாய்ப்புள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் ஏலத்தில் ஜொலித்த முன்னணி வெளிநாட்டு வீரர்கள் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டில் ஜூன் மாதத்தில் டெஸ்ட் தொடர்களில் முக்கியமான தொடரான ஆஷஸ் தொடர் நடைபெற உள்ள நிலையில், இந்த தொடருக்கான பயிற்சிக்காக ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளை சேர்ந்த முன்னணி வீரர்கள் ஐபிஎல் தொடரின் பாதியில் குறிப்பிட்ட அணிகளில் இருந்து விலகி தங்கள் நாட்டிற்கு சென்று விடுவார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது.
ஐபிஎல் தொடரின் பாதியில் விலக வாய்ப்புள்ள முன்னணி வெளிநாட்டு வீரர்கள் பற்றி காண்போம் :
பென் ஸ்டோக்ஸ் :
ஐபிஎல் 2023 ஆம் தொடரில் பங்கேற்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் 16.25 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து அணி டெஸ்ட் கேப்டனாக இருப்பதால், ஆஷஸ் தொடருக்கான பயிற்சியில் பங்கேற்கும் வகையில் அதற்கு முன்னர் நடைபெற உள்ள அயர்லாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாட சென்று விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஐபிஎல் தொடரின் பாதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விலக வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சாம் கர்ரன் :
ஐபிஎல் 2023 ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி சார்பில் மிகவும் அதிக விலைக்கு (18.5 கோடி ) வாங்கப்பட்ட ஆல்ரவுண்டர் சாம் கர்ரன் இங்கிலாந்து அணியின் முக்கிய ஆல்ரவுண்டராக திகழ்வதால் ஆஷஸ் தொடரில் பங்கேற்பதற்காக ஐபிஎல் தொடரில் இருந்து பாதியில் விலக வாய்ப்புள்ளது என்று தெரிய வந்துள்ளது.
ஜோஸ் பட்லர் :
இங்கிலாந்து அணியின் முன்னணி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார், மேலும் ஐபிஎல் தொடரில் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் முக்கிய வெளிநாட்டு வீரராக அசத்தி வருகிறார். இந்நிலையில் ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி சார்பில் முக்கிய வீரராக பட்லர் இடம் பெறுவார் என்பதால் முன்னதாகவே பயிற்சியில் ஈடுபடுவதற்காக ஐபிஎல் தொடரின் பாதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து விலகி விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜோப்ரா ஆர்ச்சர் :
மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக பங்கேற்கவில்லை, இந்த ஆண்டு மும்பை அணியில் தக்கவைக்கப்பட்ட ஆர்ச்சர் ஐபிஎல் தொடர் முழுவதும் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னணி பௌலர் ஜஸ்பிரீத் பும்ரா காயம் காரணமாக ஓய்வில் உள்ள நிலையில் ஆர்ச்சர் மும்பை இந்தியன்ஸ் பௌலிங் யூனிட்டை தலைமை தாங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து அணியின் முக்கிய வேகப்பந்து பவுலராக உள்ள ஜோப்ரா ஆர்ச்சர் ஆஷஸ் தொடரில் முக்கிய பங்கு வகிப்பார் என்பதால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஆஷஸ் தொடருக்கான பயிற்சியின் அங்கமாக, ஜோப்ரா ஆர்ச்சர் சரியான ஓய்வு எடுப்பதை உறுதி செய்யும் என்பதால் ஐபிஎல் தொடரில் பாதி போட்டிகளுக்கு மேல் ஆர்ச்சர் பங்கேற்க முடியாத நிலையில் ஏற்படலாம் என்று எதிர்பார்க்க படுகிறது.
பேட் கம்மின்ஸ் :
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முக்கிய வேகப்பந்து பவுலராக விளங்கிய பேட் கம்மின்ஸ், இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக முன்னதாகவே அறிவித்துள்ளார். ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக பேட் கம்மின்ஸ் பணியாற்றி வருவதால் இந்த ஆண்டில் நடைபெற உள்ள ஆஷஸ் டெஸ்ட் தொடர் மற்றும் ஒருநாள் உலக கோப்பை தொடரில் பங்கேற்க உள்ள நிலையில் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் 2023 தொடரின் ஏலத்திற்கு முன்பே அனைத்து வெளிநாட்டு வீரர்கள் தொடரில் தங்கள் பங்களிப்பு குறித்து தெளிவாக அவர்களின் கிரிக்கெட் வாரியத்தின் மூலம் பிசிசிஐ மற்றும் ஐபிஎல் அணி நிர்வாகத்திடம் கூறிவிட்டனர் என்று தகவல் வெளியாகியுள்ளது, இந்நிலையில் 2023 ஐபிஎல் தொடரில் இருந்து எந்த வெளிநாட்டு வீரர்கள் விலகுவார்கள் எந்த வெளிநாட்டு வீரர்கள் முழுமையாக விளையாடுவார்கள் என்று அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.